கோலாலம்பூர் : அனைத்துலக அளவில் பல விமான நிலையங்கள் கொவிட்-19 பாதிப்புகளால் முடங்கிக் கிடக்கின்றன. இருப்பினும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் தனது சேவைகளுக்காக உலகின் முதல் தரமான 10 விமான நிலையங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
அனைத்துலக விமான நிலையங்களின் ஒருங்கிணைந்த அமைப்பு நடத்திய ஆய்வுகளின்படி இந்த தேர்வு அமைந்துள்ளது.
இதே தர வரிசையில் கடந்த ஆண்டில் கேஎல்ஐஏ எனப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 17-வது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்த ஆண்டு மேலும் முன்னேறி 9-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் உலகின் சிறந்த சேவை வழங்கும் முதல் 10 விமான நிலையங்களில் ஒன்றாக நமது நாட்டின் விமான நிலையம் திகழ்கிறது.
கொவிட்-19 பாதிப்புகள், விமான சேவைகள் முடக்கம் போன்ற நிலைமைகளுக்கிடையிலும் கோலாலம்பூர் விமான நிலையம் இந்த சாதனையைப் புரிந்திருக்கிறது.
வணிக நோக்கங்களுக்காக வருகை தருபவர்களும், உல்லாசப்பொழுது போக்க வருபவர்களும் அடையும் திருப்தி, விமான நிலையத்தின் தூய்மை, கழிப்பிட வசதி போன்ற அம்சங்களை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
கேஎல்ஐஏ சாதனைக்கு போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். கேஎல்ஐஏ நிருவாகத்தினருக்கும், ஊழியர்களுக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தினருக்கும் தனது முகநூல் பதிவின் மூலம் வீ கா சியோங் வாழ்த்து தெரிவித்தார்.