Home One Line P1 “டிஸ்லெக்சியாவும் குற்றவியலும்” – முனைவர் முல்லை இராமையா

“டிஸ்லெக்சியாவும் குற்றவியலும்” – முனைவர் முல்லை இராமையா

1226
0
SHARE
Ad
முனைவர் முல்லை இராமையா

(அக்டோபர் 5 முதல் அக்டோபர் 11 வரை அனைத்துலக அளவில் டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா எழுதியிருக்கும் “டிஸ்லெக்சியாவும் குற்றவியலும்” எனும் இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)

இந்த மாதம் 5ஆம் தேதியிலிருந்து 11-ஆம் தேதி வரை உலக டிஸ்லெக்சியா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக அளவில் இதற்கோர் வாரமே ஒதுக்கப்பட்டுள்ளது என்றால் டிஸ்லெக்சியாவுக்கு நாம் கொடுக்கவேண்டிய முக்கியத்துவம் புரியும்.

டிஸ்லெக்சியா என்பது வாசிக்க, எழுத இயலாத கையறு நிலை. இது மரபணு வழி வருவது. இது ஒரு நோயே அல்ல. காலத்தோடு, பெற்றோர்களோ ஆசிரியர்களோ பிள்ளைகளின் இந்தக் கற்றல் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்கேற்ற கற்பித்தல் முறையை நாடிப் பயன் படுத்துவார்களேயானால் இந்தப் பிள்ளைகளை நிச்சயமாக முழுமையாகக் காப்பாற்ற முடியும்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் 314,000 பிள்ளைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று மலேசிய டிஸ்லெக்சியா மன்றம் கூறுகிறது.

ஒரு தமிழ்ப் பள்ளியில் ஆறு ஆண்டுகள் பயின்ற மாணவர் அந்தப் பள்ளியை விட்டு ஒரு வரிகூட வாசிக்க எழுதத் தெரியாமல் இடை நிலைப் பள்ளிக்கு செல்வாரானால் அம்மாணவரின் நிலை என்னவாகும்?

இடைநிலைப் பள்ளியின் இறுதி ஆண்டு வரை இம்மாணவர்கள் எந்தப் பாடத்திலும் தேர்வு பெறமுடியாது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பலர் இந்தக் குறைபாட்டைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதிக வருத்தமும் பயமும் தருவது இந்தப் பிள்ளைகள் இடை நிலைப் பள்ளிக்குப் போகும் முன்பே பள்ளியை விட்டு விடுபடுவது!

டிஸ்லெசியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மெதுபயிலாளர்கள் அல்ல!

டிஸ்லெசியாவால் பாதிக்கப்பட்டப் பிள்ளைகள் சராசரி அல்லது அதிக அறிவுடையவர்கள். இவர்களை மெதுபயிலாளர்கள் (slow learners) என்று அழைப்பது முற்றுலும் தவறு. மெதுபயில்வோருக்கு அறிவு நிலை சராசரி இரண்டு ஆண்டுகள் குறைந்திருக்கும். பள்ளிகளில் இவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது. டிஸ்லெக்சியா பிள்ளைகளுக்குப் பாரம்பரிய கற்பித்தல் முறை உதவாது. நீங்கள் தலைகீழாக நின்றாலும் இவர்களுக்குச் சராசரி கற்பித்தல் முறை சென்று சேராது. காரணம் அவர்களின் மூளை, மொழியை ஒலி வழி (Phonics) மட்டுமே கிரகிக்க அமைக்கப்பட்டிருக்கிறது.

மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கமும் தேசிய பல்கலைக் கழகமும் இரண்டு ஆண்டுகளாக மலாக்காவில் அமைந்திருக்கும் ஹென்றி கர்னி (Henry Gurney) சீர்திருத்தும் பள்ளியில் உள்ள பதின்மவயது கைதிகளை பல நிலைகளில் ஆராய்ந்தன. அதைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையும் விரைவில் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும். பல வெளிநாடுகளைப்போல் இங்கும் குற்றம் புரிவோரில் அதிகமானோர் டிஸ்லெசியா உடையவர்களாக உள்ளனர்.

கற்றல் குறைபாட்டிற்கும் குற்றவியலுக்கும் நெருங்கிய நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் டிஸ்லெக்சியா உடையவர்கள் ஏன் குற்றம் புரிய எத்தனிக்கிறார்கள் என்பதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன என்பதை உலக ஆய்வுகளைப்போல் எங்கள் ஆய்வும் காட்டுகிறது. அறிவிருந்தும் பள்ளிகளில் மற்ற எல்லாப் பிள்ளைகளையும் போல் தங்களால் எழுத, வாசிக்க முடியவில்லையே என்ற உணர்வு பள்ளியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர்களைப் பாதிக்கிறது.

‘எனக்கு ஆசிரியர் சொல்வதெல்லாம் புரிகிறது ஆனால் அவர் வெள்ளைப் பலகையில் எழுதுவது ஏன் புரியவில்லை? அதைப் பார்த்துக் கூட என்னால் எழுத முடியவில்லையே! எல்லாமே கிறுக்கல்போல் தோன்றுகிறதே,’ என்று எண்ணும் மாத்திரத்தில் பிள்ளைகளின் மனதில் பெரும் உளைச்சல் உண்டாகிறது. ஆனால் பிள்ளைகள் தன்னுடைய இயலாமையைக் காட்டிக் கொள்வதில்லை. உள்ளுக்குள் வைத்து குமைந்து போவார்கள்.

டிஸ்லெக்சியா குறித்த பயிற்சி ஒன்றின்போது…

ஓரிரு ஆண்டு ஆன பிறகு, ‘இது என்ன நம்மை யாரும் பொருட் படுத்தவில்லையே! மேற்கொண்டு, கேலி செய்கிறார்கள். ஆசிரியர் எனக்குப் படிக்கத் தெரியாததனால் என்னை வகுப்பின் பின்னே அமரச் சொல்லிவிட்டார். வீட்டுக்குப் போனால் பெற்றோரும் நான் நல்லா படிக்கவில்லை என்று அடிக்கிறார்கள், திட்டுகிறார்கள் அல்லது பேசாமல் விட்டுவிடுறார்கள். டியூஷனுக்குப் போனாலும் சொல்லிக்கொடுப்பது ஒன்றும் புரியவில்லை.

அந்த ஆசிரியரும் பள்ளி ஆசிரியர் போலத்தான் சொல்லித் தருகிறார். நாம் யார்? நாம் இவ்வாறே ஒடுங்கிப் போய்விட வேண்டியதுதானா? எனக்கு ஒரு குறையும் இல்லையே. எனக்கு எல்லாம் புரிகிறதே! நான் நல்லா பேசுகிறேனே! விளையாட்டுகளை எல்லாம் நல்லபடி விளையாடுகிறேனே! நல்லா வரைகிறேன்! அதை எல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லையே! நாம் ஏதாவது செய்துதான் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டும்’ என்று சொல்லமுடியாத மன அழுத்தத்தில் சேட்டைகள் செய்யக்கூடும்.

மற்ற பிள்ளைகளை துன்புறுத்துவது, கோமாளிபோல் நடந்து கொள்வது, ஆசிரியரை எதிர்ப்பது என்று பல்வேறு வகையில் வகுப்பின் கட்டுப்பாட்டை மீறக்கூடும்.

தேடும் அடையாளம் கிட்டாதபோது குழந்தை பாதிக்கப்படுகிறது

எந்த ஒரு குழந்தையும் பிறந்ததிலிருந்து தனக்கு ஒரு அடையாளத்தைத் தேடுகிறது. அந்த ஓர் அடையாளம் கிட்டாதபோது தன்-மதிப்பு இழக்கிறது. டிஸ்லெக்சியா பிள்ளைகளின் மனம் பள்ளியில்தான் பெரிதும் உடைந்து நொறுங்குகிறது. ‘நான் ஒரு உதவாக்கரை. பள்ளியிலிருந்தாலும் எனக்கு படிப்பு வராது என்று எத்தனை பதின்ம வயது குற்றவாளிகள் சொன்னார்கள்! பொறுப்பற்ற குடும்பங்களும் துணைபோகின்றன. இதனால் பிள்ளைகள் முழுமையாகவே தன்னம்பிக்கை இழக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன சேட்டைகள் செய்யும் பிள்ளைகள் பின் பெரிய விதத்தில் பள்ளியை எதிர்க்கும்போது அவர்களைப் பள்ளி வெளியேற்றுகிறது அல்லது அவர்களே வெளியேறுகிறார்கள்.

இவர்களைக் கவர்ந்து செல்வதற்கு என்று ஒரு கூட்டம் வெளியில் காத்திருக்கிறது. அந்த வன்முறையாளர்கள் இந்தப் பிள்ளைகளுக்கு முதலில் தருவது நட்பு, பிறகு அடையாளம். எந்த அடையாளத்துக்காகவும் நட்புக்காகவும் பள்ளியில் ஏங்கினார்களோ அந்த அடையாளமும் நட்பும் அவர்களுக்கு வெள்ளித் தட்டில் வைத்து தரப்படுகிறது. அதோடு மட்டுமா?

பணத்தின் சுகத்தை அறியாத பிள்ளைகளுக்குப் போதைப் பொருள் விற்பதன் மூலம் தேவைக்கு அதிகமான பணம் கையில் வந்து சேர்கிறது. இதனால் அவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது ஒரு புறம் இருக்க, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் உறவு வைத்துக் கொள்ளுதல் என்று பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள். அதே வேளையில், சின்னச் சின்ன வன்முறை காரியங்களில் இறங்குவோர் பின் அருவாள் கொண்டு தாக்குவதற்கும் தயங்குவதில்லை.

பள்ளியில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டவன் வன்முறையில் தலைவன் ஆகிறான். அவன் அங்கு மதிக்கப் படுகிறான். தோழமையை சுவாசிக்கிறான். தன்னை நிர்மூலமாக்கிய சமூகத்தைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தலைக்கேறுகிறது.
குறைந்த வருமானம் உடைய குடும்பங்கள், மற்றும் ஒழுங்கு முறையில் இயங்கமுடியாமல் உடைந்துபோன குடும்பங்களில்தான் டிஸ்லெக்சியா உள்ள பிள்ளைகள் அதிகம் வழி தவறிப் போகிறார்கள். அன்பு காட்டாத குடும்பம், அக்கறை காட்டாத பள்ளி, நட்புத் தராத சமூகம் இவையாவுமே இந்தப் பிள்ளைகளை முப்புறம் இருந்து தாக்கும்போது அவர்கள் இவை எல்லாம் ஒருங்கே கிடைக்கும் இடத்தை நாடுவதில் ஆச்சரியமில்லையே!

பள்ளிகளில் அறிவுப் பசியுடைய பிள்ளைகளுக்குத் தீனி போடாததால் அவர்கள் தங்கள் அறிவை மிக நுட்பமாக வன்முறையில் பயன் படுத்துகிறார்கள்.

மை ஸ்கில்ஸ் பவுண்டேஷன் (My Skills Foundation) தரும் புள்ளி விபரங்கள் இவை:

  • 600 இந்திய மாணவர்கள் 6ஆம் வகுப்பிற்கு முன்னரே பள்ளியிலிருந்து விடுபடுகின்றனர். 
  • 7000 இந்திய மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டுக்கு முன்னரே விடுபடுகின்றனர். 
  • 2000 இந்திய மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறுவதில்லை. 
  • 1500 / 5% இந்திய மாணவர்களே பல்கலைக் கழகங்களுக்குச் செல்கின்றனர். 
  • 28,900 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
  • 20 வயதுக்கு உட்பட்ட இந்திய வன்முறையாளர்கள் 21%. 
  • கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்தியர்கள் 24%.

தமிழ்ப் பள்ளிகளில் டிஸ்லெக்சியா மாணவர்கள்

தமிழ்ப் பள்ளிகளை மூடவேண்டும் என்று கூச்சல் போடும் கும்பல்களுக்கு நாம் வாழ்ந்து காட்ட வேண்டாமா?

நம் தமிழ்ப் பள்ளிகள் மிக நல்ல முறையில் நடத்தப் படுகின்றன என்பது நம் மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் வாங்கிக் குவிக்கும் ‘A ‘களிலிருந்தும் வெளிநாடுகளில், உலகத்தர அறிவியல் போட்டிகளில் வென்று வரும் தங்கப் பதக்கங்களிலிருந்தும் வெள்ளிடை மலை.

இருப்பினும் எங்கேயோ யாரையோ மறந்து விட்டோமோ?

எந்தவித ஆரோக்கிய போட்டிக்குள்ளும் வராத இந்த சிறுபான்மையினர்தான் பின் வன்முறையில் ஈடுபட்டு முத்திரை பதிக்கின்றனர். இவர்கள் தமிழ் பள்ளிகளிலிருந்து மட்டும் வருபவர்கள் அல்லர். தேசிய பள்ளிகளிலிருந்தும் வரக்கூடியவர்கள்தான். மலாய் இனத்தில் போதைப் பொருள் விற்கும்/ உட்கொள்ளும் பதின்மவயதினர் அதிகம். போதைக்கு அடிமையாகும் பிள்ளைகளும் குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

இருப்பினும் நாம் தமிழ் பள்ளிக்குத்தானே சொந்தம் கொண்டாட முடியும்? இந்தப் பள்ளிகள்தானே முழுக்க முழுக்க நம் சந்ததியினரை உருவாக்கிக் கொண்டிருக்கிறது?

நாம் மனது வைத்தால் ஒரு பிள்ளை கூட சோடைபோகாமல் காப்பாற்ற முடியும். அறிவாளிகளை உருவாக்கும் தமிழ்ப் பள்ளிகள் ஒரு குற்றவாளி கூட உருவாக வித்திட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கூற்று.

பள்ளி முதல் ஆண்டிலேயே இந்தக் கற்றல் குறைபாட்டை ஒவ்வொரு ஆசிரியராலும் நிச்சயமாக அடையாளம் காண முடியும். வாசிக்க எழுத முடியாமல், சொல்வதை எழுத முடியாமல், ஆசிரியர் பலகையில் எழுதுவதை அவ்வாறே தன் புத்தகத்தில் எழுத முடியாமல், அதனோடு மறதியும் அதிகம் இருந்தால், இது போதும் அந்தப் பிள்ளைக்குப் பிரத்தியேக கற்பித்தல் முறை வேண்டும் என்று நிர்ணயிக்க.

ஒரு சில சிக்கலானத் தருணத்தில் பெற்றோர் அரசு மருத்துவ மனைகளில் இருக்கும் Developmental Psychologist டைக் கண்டு வந்தால் பிள்ளைக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து விடும். இதற்குப் பள்ளியில் பிரத்தியேக சோதனைகளெல்லாம் தேவையில்லை.

பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம்

இதை எல்லாம் தாண்டி, பெற்றோர் தன் பிள்ளைக்கு டிஸ்லெக்சியா இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்கள் பிள்ளைக்குப் பள்ளி உதவமுடியும். தமிழ் பள்ளிகள் சரியான கற்றல் முறையைப் பயன் படுத்தினால் OKU என “திறன்குறைந்தவர்கள்” என்ற அட்டைகளை இந்தப் பிள்ளைகளுக்குத் தரவேண்டியதே இல்லை. அந்த அட்டைகள் உள்ள பிள்ளைகளைத் தமிழ் பள்ளிகளில் இருந்து விலக்கி பிரத்தியேகப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்.

தான் அன்றாடம் பேசும் மொழியை, கேட்கும் மொழியை, ஒலி மொழியான தமிழைக் கற்றுக் கொள்ள முடியாத பிள்ளை, ஆங்கிலமும் மலாயும் சொல்லித்தரப்படும் பிரத்தியேக பள்ளிகளில், ஆட்டிஸம், Down Syndrome, ADHD உள்ள பிள்ளைகளோடு சேர்ந்து என்ன கற்றுக் கொள்ள முடியும்? அங்கு கற்பித்தல் எந்தப் பிள்ளைக்கானது? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

அடுத்து, பிரத்தியேக கற்பித்தல் முறையை நாடி அந்த முறையில் கற்பித்தால் அதுவே டிஸ்லெக்சியாவுக்கான மருந்து. ஒலி வழிக் கல்வியே (Phonetic Approach) இந்தப் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியாகும். பல பள்ளிகளில் வைக்கப்படும் கூற்று, எங்கள் அட்டவணையில் டிஸ்லெக்சியா மாணவர்களுக்குப் பிரத்தியேகமாகப் போதிப்பதற்கு நேரம் தரப்படவில்லை என்பதுதான்.

சராசரி தமிழ் மொழி கற்பிக்கும் நேரத்தில், ஒலி வழி முறையில், இந்த மாணவர்களுக்குக் கற்பிக்கமுடியும். அவ்வாறு கற்பித்தப் பள்ளிகளில் அமோக வெற்றி கண்டுள்ளனர் என்று என்னுடைய சென்ற வருடக் கட்டுரையில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சொல்லியிருந்தார்கள்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!

நம்முடைய அறியாமையால் அறிவாளிகளாகக் கூடிய பிள்ளைகளைச் சிறைகளுக்கும் இலக்கில்லாத வாழ்க்கைக்கும் காவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு சொல்வதற்குக் காரணம், உலகத்தின் மிகப் பெரிய அறிவாளிகளில் கணிசமானோருக்கு டிஸ்லெக்சியா இருந்துள்ளது!

-முல்லை இராமையா