கடந்த ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஆதரவில், தேசிய டிக்லெக்சியா இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆங்கில மொழியிலான டிஸ்லெக்சியா பயிற்சிப்பட்டறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் பி40 சமுதாயத்தை சேர்ந்த ஆசிரியர்களும், தனித்து வாழும் தாய்மார்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
காலை 9 முதல் மாலை 5 வரை இருநாட்களுக்கு நடந்த இப்பயிற்சிப் பட்டறையை இவ்வியக்கத்தின் தலைவரும், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கென கற்பித்தல் முறையை தமிழிலும் ஆங்கிலத்திலும் உபகரணப் பொருட்களுடன் வடிவமைத்தவருமான முனைவர் முல்லை ராமையா வழிநடத்தினார்.
பட்டறையில், இம்மாணவர்களை உளரீதியாக கையாள்வது முதல், அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், விளையாட்டுகள், படிப்படியாக நடத்தப்படவேண்டிய பாடப்பயிற்சிகள், என முழு விளக்கங்கள் தரப்பட்டன.
டிஸ்லக்சியா மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட பாட முறைகள் அடங்கிய உபகரணப் பேழை கலந்துகொண்டவர்கள் அனைவரும் பயிற்சி செய்ய வழங்கப்பட்டது. அதன் துணையோடு பட்டறையில் கலந்துகொண்டவர்கள், தாங்கள் கற்றதை தனித்தனியாகவும், குழுவாகவும் செய்முறைப் பயிற்சியை மேற்கொண்டனர்.
பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் மிகவும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் கற்ற அதே வேளையில் தங்களின் சந்தேகங்களை கேள்வி நேரத்தில் கேட்டுத் தெளிவடைந்ததுடன் இரு நாட்களும் செய்முறை பயிற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, முழுமையாக பயனடைந்தது ஏற்பாட்டாளர்களுக்கு முழு மன நிறைவையளித்தது.
இந்த ஆங்கில மொழியிலான ஒலிவழி கற்பித்தல் முறை, கற்றல் குறைபாடுள்ள தம் மாணவர்கள் கல்வி கற்க மாற்றுவழியாக அமைவது உறுதி என பெற்றோர்களும், ஆசிரியர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இப்பயிற்சிப் பட்டறையில் இந்திய, சீன, மலாய் இனத்தைச் சேர்ந்த 40 பேர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பயனான வாய்ப்பை வழங்கிய தேசிய டிக்லக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை ராமையாவிற்கும், ஏற்பாட்டுக் குழுவினருக்கும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் பங்கேற்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை நடத்த இலவசமாக மண்டபத்தை வழங்கிய ஆசிய பசிபிக் பல்கலைக் கழகத் தலைவர் டத்தோ பரம்ஜித்துக்கும், நிர்வாகத்தினருக்கும், ஆதரவு தந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான கணபதி ராவ் அவர்களுக்கும் தனது நன்றியை முனைவர் முல்லை ராமையா தெரிவித்துக் கொண்டார். இந்தப் பட்டறை தனக்கு மிகவும் மனநிறைவு அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும், 900 ரிங்கிட் மதிப்புள்ள கற்பித்தல் பேழையும் இலவசமாக வழங்கப்பட்டது. கற்பித்தலில் எந்த சந்தேகம் வந்தாலும் பின்னர் தன்னிடம் தெளிவு பெறலாம் என முனைவர் முல்லை பங்கேற்பாளர்களுக்கு உறுதியளித்தார்.