தரையிறங்குவதற்கு சில வினாடிகள் இருந்த நிலையில் ATR-72 என்னும் அடையாளம் கொண்ட அந்த விமானம் நேபாளத்தின் பொக்ரா என்னும் இடத்தில் விழுந்து நொறுங்கியது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.33 மணியளவில் திரிபுவன் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டது.
இதில் பயணம் செய்தவர்களில் 5 பேர் இந்தியர்களாவர்.
பயணிகளின் பட்டியல்படி அதிலிருந்த 11 பேர் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்கள். 3 பேர் குழந்தைகளாவர்.
விமானம், பொக்ரா அனைத்துலக விமான நிலையத்தின் அருகிலிருந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் தீப்பற்றிக் கொண்டது. மீட்புப் படையினர் தீயை அணைக்க முற்பட்டனர்.
மரணமடைந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை.
மரணமடைந்தவர்களில் 53 பேர் நேபாள நாட்டவர், ஐவர் இந்தியர்கள், நால்வர் ரஷியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், இருவர் கொரியர்கள், அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் ஒருவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் – என பயணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இந்த விமானம் யேட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்ததாகும்.