Home One Line P2 செல்லியல் பார்வை : தமிழக அரசியல் : ஸ்டாலினை  முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

செல்லியல் பார்வை : தமிழக அரசியல் : ஸ்டாலினை  முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

1083
0
SHARE
Ad

செல்லியல் பார்வை | Tamil Nadu Politics: Is Palanisamy overtaking Stalin?  | 08 October 2020
தமிழக அரசியல் : ஸ்டாலினை  முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?

(கடந்த 8 அக்டோபர் 2020-ஆம் நாள் செல்லியல் பார்வை காணொலி தளத்தில் இடம் பெற்ற “தமிழக அரசியல் : ஸ்டாலினை  முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி?” என்ற தலைப்பிலான காணொலியின் கட்டுரை வடிவம்)

தமிழகத்தை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட  முன்னேற்ற கழக கட்சியிலிருந்து நேற்று புதன்கிழமை அக்டோபர் 7 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்புதான் அது!

கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமே அந்த அறிவிப்பை விடுத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அந்த அறிவிப்பு கட்சி ரீதியிலும், தமிழக அரசியல் களத்திலும் கூடுதல் வலிமையைத் தந்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பழனிசாமி-பன்னீர் செல்வம் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

தனது கட்சியில் தனக்கு எதிரான அத்தனை எதிர்ப்புகளையும் தனது சாதுரியத்தாலும், சாமர்த்தியமான நகர்வுகளாலும் எதிர்கொண்டு கடந்து வந்திருக்கிறார் எடப்பாடியார். இன்று பன்னீர் செல்வத்தைக் கொண்டே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கச் செய்திருக்கின்றார்.

அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று மாலையே பன்னீர் செல்வம் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவித்திருக்கிறார் எடப்பாடியார். இதுவும் அவரது பண்பையும், பணிவையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

மக்கள் மனங்களிலும் அதிமுக தொண்டர்களிடத்திலும் அவரது தோற்றத்தையும் மேலும் உயர்த்தியிருக்கிறது.

பிரச்சனை முடிந்ததா? மீண்டும் தொடருமா?

அதிமுகவின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக வட்டாரங்களில் உற்சாக அலை கரை புரண்டு ஓடுகிறது எனலாம்.

உட்கட்சி சர்ச்சைகளைத் தீர்த்துக் கொண்ட காரணத்தால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்  தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் மீண்டும் முன்னணி வகிக்கும்  நிலைக்கு அதிமுக வந்துள்ளதாக சில  அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்

வேறு சில   அரசியல் பார்வையாளர்களோ, எதிர்மாறாகக் கருதுகிறார்கள்.

இந்த சமாதானமும் இணக்கமும் தற்காலிகமானதுதான்; விரைவில் இவர்கள் இருவருக்கும் பிரச்சனை வந்துவிடும்; அதிமுகவில் பிளவு ஏற்படும் என்று ஆருடம் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம். முதல்வர் வேட்பாளராக பழனிசாமி முடிவாகி விட்டதால், துணை முதல்வராக பன்னீர் செல்வம் தொடர்வார். அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினராக முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்தவர் என்ற காரணத்தால் அந்தப் பதவியை நான் இன்னும் அனுபவிக்கவில்லையே என்ற ஏக்கமும் பன்னீர் செல்வத்துக்கு இனி ஏற்படப் போவதில்லை.

எனவே, சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பாக மோதிக் கொண்டால், அதனால் பலனடையப் போவது திமுகவும், ஸ்டாலினும்தான் என்பதையும் இழப்புகள் நமக்கும் கட்சிக்கும்தான் என்பதையும் இரண்டு தரப்புகளுமே நன்கு உணர்ந்திருக்கின்றன.

ஸ்டாலினை முந்துவாரா எடப்பாடி?

அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வலிமையும் ஆளுமையும் கொண்டதாக திமுக கருதப்படுகிறது. அதன் தலைவர் ஸ்டாலினுக்கு இணையான ஆளுமையாக, சரியான போட்டியாக அதிமுக மூலம் பழனிசாமி இப்போது தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.

ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, தங்கை கனிமொழி, நெருங்கிய உறவினர் தயாநிதி மாறன், பின்னணியில் இயங்கும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என குடும்பக் கட்சியாக திமுக பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் அரசியல் போரில் திமுகவுக்குப் பின்னடைவாக, ஒரு கறையாக இந்த அம்சம் நிச்சயம் பார்க்கப்படும்.

அந்த அம்சத்தை எடப்பாடியை முன்மொழிந்த வகையில் அதிமுக முறியடித்திருக்கிறது. சாதாரணப் பின்னணியைக் கொண்ட ஒருவர் அதிமுகவை தலைமையேற்று நடத்த முடியும், முதல்வராக வர முடியும் என்பதை அதிமுக நிரூபித்திருக்கிறது.

எங்களின் முதல்வர் ஸ்டாலின் தான் – முதலில் உங்களின் முதல்வர் யார் என்பதைச் சொல்லுங்கள் என அதிமுக வட்டாரத்தைப் பார்த்து திமுகவினர் இதுநாள்வரை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர்.

இனி அத்தகைய பிரச்சாரத் தாக்குதலை அதிமுக நோக்கி, திமுக தொடுக்க முடியாது. அந்தப் பிரச்சாரக் கணையின் கூர்மையை, எடப்பாடிதான் முதல்வர் என்ற அறிவிப்பு முனை மழுங்கச் செய்திருக்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில்  முதல்வராக வாகை சூடப் போவது ஸ்டாலினா அல்லது பழனிசாமியா என்ற கேள்விதான் இனி அடுத்த கட்டமாக, தமிழக மக்கள் மன்றங்களில் அரங்கேறப் போகும் விவாதக் களம்!

இந்த இரண்டு வேட்பாளர்களும் ஜெயலலிதா கருணாநிதி போன்றவர்களின் ஆளுமையை, மக்கள் செல்வாக்கைக் கொண்டவர்கள் அல்ல!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள்தான் அவர்களின் ஆளுமையை, செல்வாக்கை நிரூபிக்கும்.

இருவரில் தமிழக அரசியல் களத்தில் முந்தப் போவது யார் என்பது அடுத்த சில மாதங்களில் மேலும் தெளிவாகும்.

இன்னும் இரண்டு நிகழ்வுகள் நடந்தேறினால்தான் தமிழக அரசியலின் காட்சிகள் எவ்வாறு மாறும் என்பதை நாம் கணிக்க முடியும்.

முதலாவது, தற்போது சிறையில் இருக்கும் சசிகலா தமிழக தேர்தலுக்கு முன்பாக விடுதலையாவாரா? அப்படியே விடுதலையாகி வெளியே வந்தால் அவரது அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பது!

இரண்டாவது நிகழ்வு நடிகர் ரஜினிகாந்த் தான் உறுதியளித்தபடி புதிய கட்சியைத் தொடங்கி அரசியலில் தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவாரா? என்பது!

இந்த இரண்டு நிகழ்வுகளும் நடைபெறாவிட்டால் – இனி தமிழக அரசியல் களம்  அடுத்த முதல்வர் ஸ்டாலினா அல்லது எடப்பாடி பழனிசாமியா என்ற தளத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கும்!

-இரா.முத்தரசன்