கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைச் சமாளிக்க தற்போதுள்ள சட்டம் போதுமானதாக இருப்பதால், அவசரகாலம் தேவையற்றது என்று நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும், தேர்தல்களைத் தவிர்க்கவும் மொகிதின் அவசரகால அறிவிப்பைப் பயன்படுத்தினார் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததும், நாட்டில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மையும் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வாரங்களில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கத்தை அமைத்து மொகிதினை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றும் முயற்சியில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அறிவித்திருந்தார்.
கொவிட் -19 பாதிப்பை சமாளிக்க அவசரகால அறிவிப்பு தேவையில்லை என்று முன்னாள் சுகாதார அமைச்சரான சுல்கிப்ளி அகமட் டுவிட்டரில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன், மிக அதிகமான கொவிட் -19 சம்பவங்கள் பதிவானதை அடுத்து , அவர்கள் அவசரகால நிலையை அறிவிக்க தேவையில்லை என்று கூறினார்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1988 (சட்டம் 342) ஐப் பயன்படுத்துவது போதுமானது என்று ஜசெக பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ இன் கூறினார்.
பிரதமர் அதிகாரத்தில் இருக்க அவசரகாலத்தைப் பயன்படுத்துகிறாரா என்றும் இயோ கேள்வி எழுப்பினார்.