சென்னை : அடுத்த ஆண்டு தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கியப் புள்ளியுமான அமித் ஷா நேற்று சனிக்கிழமை (நவம்பர் 21) சென்னைக்கு வருகை மேற்கொண்டது அரசியல் பரபரப்பை மேலும் அதிகரிக்கச் செய்தது.
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற திருவள்ளூர் – தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை அர்ப்பணிக்கும் விழா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டுவிழாவில் அமித் ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் அமித் ஷாவிடம் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை எடப்பாடியார் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து பல்வேறு சந்திப்புக் கூட்டங்களை நடத்திய அமித் ஷா அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தது போன்றே சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக-அதிமுக கூட்டணி நீடிக்கவிருப்பது அதிமுகவுக்கு பலம் சேர்க்குமா அல்லது பலவீனத்தைத் தருமா என்ற விவாதங்கள் தமிழகத்தில் தொடங்கியிருக்கின்றன.
கலைவாணர் அரங்க பொது நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திரத் தங்கும் விடுதிக்கு நேரடியாக சென்று எடப்பாடியாரும், பன்னீர் செல்வமும் அமித் ஷாவைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பின்போது அமைச்சர் ஜெயகுமாரும் உடனிருந்தார்.
அதைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகளோடு சந்திப்புக் கூட்டத்தை நடத்திய அமித் ஷா கூட்டணியை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம், நீங்கள் களப்பணியில் கவனம் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார் என்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு 11 மணியளவில், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி அமித் ஷாவைச் சந்தித்து சுமார் 3 மணி நேரம் நள்ளிரவைத் தாண்டி ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி போட்டியிடமாட்டார் என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில் அமித் ஷாவின் வருகையைத் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது எனக் கருதப்படுகிறது.
சென்னைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அமித் ஷா இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி திரும்பினார்.