புது டில்லி: விவசாய சட்டங்களை அகற்றக் கோரி போராடங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.
புதிய சட்டங்கள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் பயன் பெறுவர் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுகின்றன.
இவர்களுக்கு பலமாக எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாக குற்றச் சாட்டுகளும் உள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள மத்திய அரசு, விவசாயிகளின் சந்தேகங்களுக்கு தீர்வு காண தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொட்டுப் பேசிய மோடி, விளைபொருள் கொள்முதலுக்கான, குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்று உறுதி அளித்தார். புதிய விவசாயச் சட்டங்களால், குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்பட்டால், எப்படி ஆண்டுக்காண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி, புதிய விவசாயச் சட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த சட்டங்கள் மாநில அரசுகள், பொருளாதார மற்றும் விவசாய நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தான் கொண்டுவரப்பட்டது என்றும் பிரதமர் மோடி விளக்கமளித்தார்.