Home நாடு “ஒரே இந்திய சமூகமாக ஒருமித்துக் குரல் கொடுப்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

“ஒரே இந்திய சமூகமாக ஒருமித்துக் குரல் கொடுப்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

588
0
SHARE
Ad

சித்திரைப் புத்தாண்டு, தெலுங்கு, மலையாள, பைசாக்கி புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

சித்திரைப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி மகிழும் மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் பிறக்கின்ற “பிலவ” புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சித்திரைப் புத்தாண்டை நமது இந்துப் பெருமக்களும், தமிழர்களும் பாரம்பரிய முறைப்படியும், நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த பஞ்சாங்கங்களின் அடிப்படையிலும் கொண்டாடி வந்திருக்கின்றனர்.

அதே வேளையில் பல மலேசிய இந்திய சமூகங்களும், தங்களின் கலாச்சார, பாரம்பரியத்துக்கு ஏற்ப தங்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஓரிரண்டு தினங்களில் கொண்டாடுகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 13) தெலுங்கு புத்தாண்டைக் கொண்டாடிய நமது தெலுங்கு சமூக மக்களுக்கும், வைசாகி புத்தாண்டைக் கொண்டாடிய சீக்கிய சகோதர இனத்தினருக்கும், இன்று (ஏப்ரல் 14) விஷூ புத்தாண்டைக் கொண்டாடும் மலையாள சகோதர சமூகத்தினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழி, கலாச்சாரம், பாரம்பரியக் கொண்டாட்டங்கள் என நமது இந்திய சமூகங்களிடையே வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மலேசியாவைப் பொறுத்தவரை நாம் அனைவரும் ஒரே சமூகமாக “மலேசிய இந்தியர்கள்” என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

நமது உரிமைகளையும் சலுகைகளையும் ஒரே இந்திய சமூகம் என்ற முறையில் பெறுவதற்காகத்தான் கோரிக்கை வைக்கிறோம். போராடுகிறோம்.

இந்தப் பண்பாடும் ஒற்றுமையும் எப்போதும் தொடர வேண்டும்.

நமது மஇகாவிலும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு பிரிவினரும் கடந்த காலங்களில் தலைவர்களாக இருந்திருக்கின்றனர். கட்சிகளின் பல்வேறு பதவிகளை அலங்கரித்திருக்கின்றனர். கட்சி சார்பாக, பல்வேறு அரசாங்க பதவிகளையும் வகித்திருக்கின்றனர்.

மஇகாவைப் பொறுத்தவரையில் நமது இந்தியர்களுக்குள் எந்தவித இன,மத பேதமின்றி அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளுக்கும் அவர்களின் பங்களிப்பு, சேவைகள், திறமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்புகள் எனது தலைமைத்துவத்தில் வழங்கப்பட நான் உறுதி கொண்டுள்ளேன்.

நமது இந்திய சமூகங்கள் அனைத்தும் ஒற்றுமையாக, ஒரே குரலில் தொடர்ந்து இணைந்து நமது நலன்களுக்காக குரல் கொடுத்து வர வேண்டும் என இந்த புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் நமது அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கான போராட்டமும் வலிமையுடன் திகழும்.

நமது புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை வழக்கம்போல  ஒன்றாக அமர்ந்து, திரளாகத் திரண்டு கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். கொவிட்-19 பாதிப்புகளும் அதன் தாக்கங்களும் இன்னும் குறையவில்லை.

எனினும், தற்போது தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கட்டம் கட்டமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவும், அரசாங்கம் எடுத்து வரும் பல்வேறு பாதுகாப்பு, மீட்சித் திட்டங்கள் காரணமாகவும் நாம் இந்த சூழலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கிறது.

நமது இந்திய சமூகங்களும் இந்தப் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை சுகாதார நெறிமுறைகளோடும், அரசாங்கம் வகுத்துள்ள கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பின்பற்றியும் மகிழ்ச்சியுடனும், அதே வேளையில் தகுந்த பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்.

அன்புடன்,

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்