Home நாடு “வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

607
0
SHARE
Ad

மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு. இந்தியர்கள் நாம் பல்வேறு மொழிகளையும்,  கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறோம். ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம்.

விசு, உகாதி, வைசாக்கி, சித்திரைப் புத்தாண்டை அனைவரும் குடும்பத்தோடு இனிதே கொண்டாடி மகிழ என் அன்பார்ந்த வாழ்த்துகள்.

ஒன்று சேர்ந்து உற்சாகமாக நாம் அனைவரும் மலேசிய இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்தப் புத்தாண்டுகளைக் கொண்டாடி வருகிறோம். அவரவர் கலாச்சாரத்திற்கு ஏற்ப உடையணிவதும், பலகாரங்கள் செய்வதும் பகிர்ந்து உண்பதும் காலங்காலமாக நாம் பின்பற்றி வரும் பண்பாட்டுச் சிறப்பு.

#TamilSchoolmychoice

ஏப்ரல் மாதம் நமது இந்திய சமூகங்களின் புத்தாண்டு கொண்டாட்ட மாதமாகும். மலையாள சகோதரர்கள் விஷூ புத்தாண்டையும், தெலுங்கு சமூகத்தினர் உகாதி தெலுங்கு புத்தாண்டையும், சீக்கிய சகோதர இனத்தினர் வைசாக்கி புத்தாண்டு கொண்டாட்டத்தையும் கொண்டாட, நமது இந்துப் பெருமக்கள் சித்திரைப் புத்தாண்டை அடுத்தடுத்து கொண்டாடி மகிழ்கின்றனர். நமது இனத்தின் கலாச்சார அடையாளமாக இந்தக் கொண்டாட்டங்கள் திகழ்கின்றன.

இந்த நாட்டில் மூன்றாவது பெரிய இனமாக இருக்கின்ற நாம் அனைவரும் மலேசிய இந்தியர்கள் என்ற அடையாளத்தையும் நாம் தொலைத்துவிடக் கூடாது.

குறிப்பாக கொரொனா தொற்றினால் உலக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், நமது சகோதரர்கள் சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து விடாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகமாக, ஒருமித்த குரலில் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில் வெற்றியடைய வேண்டும். அதே வேளையில் மற்ற இனங்கள் மதிக்கக் கூடிய இனமாகவும் இருந்தால்தால் நாம் உச்சத்தைத் தொட முடியும்.

எனவே, வணக்கத்திற்குரிய மலேசிய இந்தியர்களே! நம்முடைய இனத்திற்கேற்ப இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் திளைத்திருக்கும் இந்த நல்ல வேளையில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். நாம் ஒற்றுமையாக இருந்தால்தான் இந்த நாட்டில் நாம் வெற்றியடைந்த சமுதாயமாக உயர முடியும் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தி உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

டத்தோஸ்ரீ எம்.சரவணன்
மனிதவள அமைச்சர்
மஇகா தேசியத் துணைத் தலைவர்