சென்னை : இந்திய மத்திய வங்கியின் (ரிசர்வ் பேங்க்) முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தமிழ்நாட்டுக்கான பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொருளாதார விவகாரங்களில் மாநில அரசுக்கு ஆலோசனை கூற 5 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளார்.
அந்தக் குழுவில்தான் ரகுராம் ராஜன் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவராக ரகுராம் ராஜன் போற்றப்படுகிறார்.
அவருடன் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் எஸ்தர் டப்ளோ (Esther Duflo) என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்தரும் அவரின் கணவர் அபிஜித் பானர்ஜியும் இணைந்து பொருளாதார ஆராய்ச்சிக்காக நோபல் பரிசைப் பெற்றவர்களாவர். எஸ்தர் பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.
இந்தக் குழு மாநில நிதி நிர்வாகத்தையும், சமூக உதவிப் பணிகளையும் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கும்.
மேலும் அரவிந்த் சுப்பிரமணியம், ஜீன் டிரெஸ், எஸ்.நாராயணன் ஆகியோரும் இந்த பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் அரவிந்த் சுப்பிரமணியம் இந்திய அரசாங்கத்திற்கான முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகராவார்.
ஜீன் டிரெஸ் சமூக நலன்கள் மீதான பொருளாதார ஆராய்ச்சியாளர் ஆவார். எஸ்.நாராயணன் மத்திய அரசாங்கத்தின் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆவார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமாவார்.
தமிழ் நாட்டின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டை வளமான பாதையில் செலுத்த இந்த ஐவர் கொண்ட குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் வழங்கும்.