சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தமிழ் நாடு சட்டமன்றத்தில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளில் இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைப்பதும் ஒன்றாகும். தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியா அளவிலும் புகழ்பெற்ற ஆலயம் அமைந்திருக்கும் நகரம் இராமேஸ்வரம்.
இராமாயண இதிகாசத்தின்படி இராவணனுடனான போரை இலங்கையில் முடித்து இராமர் இந்திய மண்ணுக்குத் திரும்பியபோது, சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க சிவலிங்கம் ஒன்றை நிர்மாணித்து வழிபட்டாராம். அந்த ஆலயமே இராமேஸ்வரம் ஆலயமாகும்.
இதன் காரணமாக வட இந்தியாவிலிருந்தும் ஏராளமாக பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு திரண்டு வருகிறார்கள். கடலை ஒட்டி ஆலயம் அமைந்துள்ளதால் சில புனித நாட்களில் கடலில் நீராடுவதும் பக்தர்களின் வழக்கமாகும்.
இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்துக்கு அதிக விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஏற்கனவே, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகர்களில் அனைத்துலகப் பயணிகளுக்கான விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவை தவிர, தூத்துக்குடியிலும் விமான நிலையம் செயல்படுகிறது. ஓசூர், சேலம் போன்ற நகர்களில் விமான நிலையம் அமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.