Home உலகம் பண்டோரா பேப்பர்ஸ் : உலகப் பிரமுகர்கள் குவித்து வைத்திருக்கும் பணம் – பட்டியல் வெளியீடு

பண்டோரா பேப்பர்ஸ் : உலகப் பிரமுகர்கள் குவித்து வைத்திருக்கும் பணம் – பட்டியல் வெளியீடு

546
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அண்மைய சில நாட்களாக பண்டோரா பேப்பர்ஸ் (Pandora Millions) என்ற பெயர் ஊடகங்களில் பிரபலமாகத் தொடங்கியிருக்கிறது.

என்ன அது பண்டோரா பேப்பர்ஸ்?

உலகம் எங்கிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட வணிகப் பிரமுகர்கள், 30-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், 300-க்கும் மேற்பட்ட அரசாங்க பொதுச்சேவை அதிகாரிகள் போன்றவர்கள் இரகசியப் பணப் பரிமாற்றம் மூலம் அயல் நாடுகளில் குவித்து வைத்திருக்கும் பணம் தொடர்பான ஆவணங்களின் பட்டியல்தான் பண்டோரா பேப்பர்ஸ்.

#TamilSchoolmychoice

சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த இவர்களின் பட்டியல் இப்போது உலகம் எங்கும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அயல்நாடுகளில் இயங்கும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டிருக்கும் 11.9 மில்லியன் ஆவணங்கள், பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பனாமா, துபாய், மொனாக்கோ, சுவிட்சர்லாந்து, கேய்மன் தீவுகள் போன்ற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பண சேமிப்புகளின் பட்டியலும் இந்த பண்டோரா பேப்பர்ஸ் தொகுப்பில் அடங்கும்.

மேற்குறிப்பிட்ட நாடுகள் எல்லாம் இரகசியமாகவும், முறைகேடாகவும் பெறப்பட்ட பணத்தைப் பதுக்கி வைக்கும் தளங்களாக நீண்ட காலமாக அறியப்பட்டவையாகும்.

இங்கு பணத்தைப் பதுக்கி வைப்பவர்களிடம் அந்தப் பணம் எங்கிருந்து பெறப்பட்டது என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

வணிகம் செய்யும் நிறுவனங்கள் போன்று போலி நிறுவனங்கள் அமைக்கப்பட்டு அந்த நிறுவனங்களுக்கு என வங்கிக் கணக்குகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் திறக்கப்பட்டு, அந்த வங்கிக் கணக்குகளில் பிரமுகர்கள் தங்களின் பணங்களைப் பதுக்கி வைக்கிறார்கள்.

அவர்களின் இந்த ஆவணங்கள்தான் எப்படியோ இரகசியமாக வெளியிடப்பட்டு இப்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் உலவத் தொடங்கியிருக்கின்றன.

ஆங்கிலத்தில் Opening the Pandora Box என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது என நமது தமிழில் கூறுவார்களே – அதே பொருளைக் கொண்ட சொற்றொடர்தான் மேற்குறிப்பிட்ட ஆங்கில வாசகம்!

பண்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரும் அதிலிருந்துதான் உருவாகியது.

ஒன்றைத் தேடப் போக – அல்லது தோண்டப் போக – நாம் எதிர்பாராத ஆச்சரியமும் அதிர்ச்சிகளும் நிறைந்த புதிய விவகாரங்கள் பூதம் போல புறப்பட்டு எழும் நிலைமையைத்தான் இந்த சொற்றொடர்கள் விவரிக்கின்றன.

அடுத்தடுத்து எந்த முக்கியப் பிரமுகர்களின் இரகசியப் பண சேமிப்பு பகிரங்கமாகப்படும் என்பதற்காக ஊடக உலகமும் காத்திருக்கிறது.