(பிறக்கும் 2022 புத்தாண்டை முன்னிட்டு ராகா வானொலி அறிவிப்பாளர்கள் அஹிலா, ரேவதி, உதயா, கோகுலன் ஆகியோருடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்)
- புத்தாண்டைக் கொண்டாட உங்களின் திட்டங்கள் யாவை?
அஹிலா: முக்கியமான மற்றும் நெருக்கமானக் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு மிதமான கொண்டாட்டமாகத்தான் இப்புத்தாண்டு இருக்கும்.
ரேவதி: இந்தப் புத்தாண்டை வழக்கம் போல் எனதுக் குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் சில சிறப்பு பூஜைகள் செய்து கொண்டாடுவேன். சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் செல்வேன்.
உதயா: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டச் சிலரைச் சந்தித்து, அவர்களுக்குச் சில உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளேன். அதுமட்டுமின்றி, அவர்களுடன் சில மதிப்புமிக்க நேரத்தையும் செலவிட ஆவலுடன் உள்ளேன்.
கோகுலன்: நான் எனதுச் சொந்த ஊருக்குத் திரும்பி எனதுக் குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன்.
- முந்தைய வருடங்கள் அல்லது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், வரவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம் உங்களுக்கு எவ்வாறு வித்தியாசமாக இருக்கும் என்று பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அஹிலா: நான் ஒரு தொலைக்காட்சிப் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதால் புத்தாண்டு முதல் நாள் அதாவது, டிசம்பர் 31 எனக்குப் படப்பிடிப்பு உள்ளது. நள்ளிரவு வரைப் படப்பிடிப்பு நடை பெறும் என்பதால் ஒட்டுமொத்தப் படக்குழுவினருடன் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது எனக்குப் புதிய அனுபவம். எனவே, ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
ரேவதி: தொடர் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கத்திற்குப் பிறகு இந்தப் புத்தாண்டை வரவேற்கிறோம். இதனால், ஓராண்டுக்குப் பிறகு, வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்துக், குடும்ப உறுப்பினர்களின் ஒன்றுக்கூடலுடன் புத்தாண்டைக் கொண்டாடுவது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும்.
உதயா: கோவிட்-19 காரணமாகக் கடந்த ஆண்டு மகிழ்ச்சியாக இல்லாததால் இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்து மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
கோகுலன்: கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக எனதுக் குடும்ப உறுப்பினர்கள் இல்லாத நிலையில் கடந்தப் புத்தாண்டைக் காஜாங்கில் கொண்டாடினேன். இருப்பினும், 2022-ஆம் ஆண்டுப் புத்தாண்டு எனக்கு ஒரு அற்புதமான ஒன்றாக இருக்கும். ஏனெனில், நான் எனதுச் சொந்த ஊரில் எனதுக் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட உள்ளேன்.
- தற்போதைய வெள்ளப் பேரிடர், தொற்றுநோய் போன்றவற்றுக்கு மத்தியில் பாதுக்காப்பானப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கானச் சிலக் குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
அஹிலா: நான் வீட்டில் இருக்கத் திட்டமிட்டுள்ளேன். மேலும் சில உணவு வகைகளை வாங்கவும் திட்டமிட்டுள்ளேன். ஒரு நல்லத் திரைப்படத்தைக் கண்டுக் களிப்பதோடுக் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடவும் உள்ளேன். கோவிட்-19 இன்னும் நம்மைச் சுற்றி நீடிப்பதாலும், வெள்ளப் பேரிடரால் பல மலேசியர்கள் அவதிப்படுவதாலும் இது ஒரு நல்ல உதவிக் குறிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதும் நல்லது.
ரேவதி: நாடுமுழுவதும் திடீர் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டுள்ளதால், விடுமுறைத் திட்டங்களைத் தவிர்த்துப், புத்தாண்டை வீட்டில் பாதுகாப்பாகக் கொண்டாடுமாறு நான் பரிந்துரைக்கிறேன். வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவை உண்ணுமாறு அனைவரையும் ஊக்குவிப்பேன்.
உதயா: தயவுச்செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் உங்கள் பாதுகாப்பு அம்சங்கள் செவ்வென இருப்பதை உறுதிச்செய்யுங்கள்.
கோகுலன்: நம் நாட்டின் சிலப் பகுதிகள் திடீர் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளத் தற்போதையச் சூழ்நிலையையும் சிலர் அதிலிருந்து மீண்டு வருவதையும் நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலை விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமாரப் பிரார்த்தனையும் செய்துக் கொள்கிறேன். அதிகத் துன்பம் இல்லாமல் மீட்புச் செயல்முறைச் சீராக நடக்கட்டும். இந்த இயற்கைப் பேரிடரில் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், அன்பானவர்களையும் இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- இரசிகர்களுக்கான உங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
அஹிலா: ஒவ்வொருப் புத்தாண்டையும் பெரிய இலக்குகள் அல்லது அதிக எதிர்ப்பார்ப்புகள் இல்லாமல் வரவேற்பவள் நான். காலத்துடன் பயணிப்பதை நான் விரும்புகிறேன். ஆனால், நேர்மறையாக இருப்பது எப்போதும் சிறந்தத் தேர்வாகும். எனவே, உங்கள் அனைவருக்கும் நேர்மறையான ஆண்டாக இப்புத்தாண்டு அமையட்டும் என வாழ்த்தி, இனியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரேவதி: அனைத்து ராகா இரசிகர்களுக்கும் எனதுப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஆரோக்கியமான வாழ்க்கை ஒரு செல்வச் செழிப்பான வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளவும். உங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். மேலும், உங்கள் எதிர்காலத்திற்காகச் சிறிதுப் பணத்தைச் சேமியுங்கள். ஏனெனில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது.
உதயா: 2022-ஆம் ஆண்டு நிறைய அமைதியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும். 2020 மற்றும் 2021 நமக்கு நிறையப் பாடங்களைக் கொடுத்தது. ஒரு செழிப்பான வருடத்தை அனுபவிக்க அப்பாடங்களை 2022-இல் பயன்படுத்திப் பயனடைவோம்.
கோகுலன்: ராகா நேயர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்தப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ராகா குடும்பத்தில் ஓர் உறுப்பினராகிய எனது நான்காவது வருடத்தின் ஆரம்பம், 2022. இவ்வேளையில் தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நான் நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.