(அன்வார் இப்ராஹிம் – மலேசிய அரசியல் அரங்கில் கடந்த 42 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர். சிறைக்குள் இருந்த போதும் அரசியல் களத்தில் அவரின் அதிர்வுகளை உணர வைத்தவர்.: ஆனால் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து தேர்தல் தோல்விகள் – அடுத்த பிரதமர் நான்தான் என்ற முழக்கத்தில் தொய்வு – அரசியல் வியூகங்களில் குழப்பம் – என அடுக்கடுக்காகப் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறார். அவரின் பலவீனங்கள் எங்கே? மீண்டும் வீறு கொண்டு எழுவாரா? தன் அரசியல் பார்வையை வழங்குகிறார் இரா. முத்தரசன்)
2004ஆம் ஆண்டில் முதலாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில் விடுதலையானார் அன்வார் இப்ராஹிம். அந்தக் காலகட்டத்தில் பெட்டாலிங் ஜெயா போக்குவரத்துத்
தொழிலாளர் சங்க மண்டபத்தில் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
சிறையில் இருந்து விடுதலையாகி அவர் கலந்துகொண்ட முதல் சில நிகழ்ச்சிகளில் அதுவும் ஒன்று. சரி! அந்தக் கலந்துரையாடலில் அப்படி என்னதான் உரையாற்றப் போகிறார்? சிறைவாசத்திருக்குப் பின் மீண்டிருக்கும்
அவர் தோற்றத்தில் எப்படியிருப்பார்? எவ்வளவு பேர் அந்தக் கூட்டத்தில் அவரின் உரைகேட்கத் திரளப் போகிறார்கள்? என்பதைக் காண நானும் ஆவலுடன் அந்நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுமார் 50 பேர் கூட இருக்க
மாட்டார்கள். ஏமாற்றமடைந்தேன்.
ஒருகாலத்தில் அமைச்சர், துணைப் பிரதமர், அம்னோவின் துணைத் தலைவர் என்பது போன்ற தோரணைகளில் வலம் வந்தவர். ஆனால் அவரோ வழக்கம்போல் அந்தக் கலந்துரையாடலில் உற்சாகத்துடன் பங்குபெற்றார். அவருக்கே உரித்தான முறையில் உரை நிகழ்த்தினார்.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது அவரின் கவர்ச்சியும் ஆதரவு தளமும் கரைந்துபோய் விட்டது என அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நினைத்திருப்பார்கள். ஒருகாலத்தில் அமைச்சர், துணைப் பிரதமர், அம்னோவின் துணைத் தலைவர் என்பது போன்ற தோரணைகளில் வலம் வந்தவர் – ஆயிரக்கணக்கில் கூட்டத்தை ஈர்த்தவர் – நிலைமை இப்படி 50 பேர் கொண்ட கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஆகிவிட்டதே என நானும் அப்போது நினைத்தேன்.
மாதங்கள் சில கடந்தன. 2008 பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. தலைநகர் கம்போங் கெரிஞ்சி வட்டாரத்தில் அவர் உரையாற்றுகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்து நானும் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். மிகவும்
ஆச்சரியப்பட்டேன். சுமார் 5 ஆயிரம் பேர் அவரின் உரையைக் கேட்கத் திரண்டிருந்தனர். அவரின் உரையின் இடையில் கைதட்டி ஆரவாரம் செய்து ஆதரவும் தெரிவித்தனர்.
அதுதான் அன்வார் இப்ராஹிம்! ஒவ்வொரு முறையும் சாம்பலில் இருந்து எழும் ஃபினிக்ஸ் பறவைபோல அரசியலில் வீறுகொண்டு மீண்டெழுந்தவர் அவர்.
2008 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்தார் – வெற்றி பெற்றார்
தொடர்ந்து வந்த 2008 பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய முன்னணிக்கு எதிராக ஓரணியாகப் போட்டியிட வைத்ததில், அவரின் பக்காத்தான் ராக்யாட் கூட்டணி 5 மாநிலங்களைக் கைப்பற்றி தேசிய முன்னணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.
2013ஆம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்கும் வகையில் மக்கள் ஆதரவு வாக்குகளைப் பெற்றார் அன்வார். மிக சொற்ப விழுக்காட்டு வித்தியாசத்திலேயே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை பக்காத்தான் ராயாட் இழந்தது.
அன்வாருக்குப் போடப்பட்ட அரசியல் முட்டுக் கட்டை – 2-வது ஓரினப் புணர்ச்சி வழக்கு
அதற்குப் பிறகு அவர் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்குத் தொடங்கியது. வழக்கின் முடிவில் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
அந்தத் தீர்ப்பையும் அவரின் வயதையும் கணக்கிட்டு இணைத்துப் பார்த்த, அவரின் அரசியல் எதிரிகள் – அவரின் அரசியல் பயணம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதந்தனர். ஆனால் அதற்குப் பிறகுதான் யாரும்
எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் அரங்கேறின.
நஜிப்பிற்கு எதிராக போர்க்கொடித் தூக்கினார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது. வலிமை வாய்ந்த பிரதமரான நஜிப்பையும் அவர் தலைமை தாங்கிய தேசிய முன்னணியையும் வீழ்த்த அன்வாருடனும், சிறந்த
உட்கட்டமைப்பைக் கொண்டிருந்த பிகேஆர்-பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியுடனும் கைகோர்ப்பது ஒன்றுதான் வழி என்பதை உணர்ந்தார் மகாதீர்.
சிறையில் இருந்த அன்வார் ஒருநாள் வழக்கொன்றுக்காக நீதிமன்றம் வந்தபோது, 2016 செப்டம்பரில் அவரை நேரடியாக நீதிமன்றத்தில் சென்று சந்தித்தார்
மகாதீர்.
அந்தக் காட்சியைக் கண்டு மலேசியர்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தனர். அவர்கள் இருவரும் ஒரு காலகட்டத்தில் இவ்வாறு இணைவார்கள் என யாருமே கற்பனைக்கூடச் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். 18
ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்களிருவரும் அப்போதுதான் நேருக்கு நேர் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.
துன் மகாதீரின் நெருங்கிய சகாவான துன் டாய்ம் சைனுடின் 2018 பொதுத்
தேர்தலுக்குப் பின்னர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் “தான் மீண்டும்
வழக்கறிஞராக வழக்கறிஞர் மன்றத்தில் பதிந்துகொண்டு அன்வாரின் வழக்கறிஞர்
என்ற தோரணையில் மகாதீர் சார்பாகச் சிறை சென்று அன்வாரைச் சந்தித்து 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்ததாகக்” குறிப்பிட்டார்.
அதன்பின்னர் நடந்தவை அனைவரும் அறிந்ததே! 2018-இல் பக்காத்தான் ஹாரப்பான், துன் மகாதீர் தலைமையில் ஆட்சியைக் கைப்பற்ற – சிறையில் இருந்து விடுதலைபெற்று – தன் மீதான குற்றங்கள் அரச மன்னிப்பால்
துடைத்தொழிக்கப்பட்ட நிலையில் – மீண்டும் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று உலாவந்தார் அன்வார்.
எழுச்சியும், வீழ்ச்சியும் கொண்ட அன்வாரின் அரசியல் பயணம்
இப்படிப்பட்ட உயர்வும் தாழ்வும் கொண்ட கரடுமுரடான அரசியல் பாதையைக் கடந்துவந்த அன்வார்தான் இப்போது தமது 75-ஆவது வயதில் சற்றே தடுமாற்றத்துடன் மலேசிய அரசியல் களத்தில் நிற்பது தெளிவாகத் தெரிகிறது.
அவரின் அணுகுமுறைகள், வியூகங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகின்றன.
அன்வாரின் பலம் என்பது தனது உரையைக் கேட்கவும் காணவும் ஆயிரக்கணக்கானோரை ஈர்ப்பதுதான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தகைய பாணி அரசியல் அணுகுமுறையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. கோவிட்–19 பாதிப்புகள் அதற்குக் காரணம் என்பதையும் விளக்கத் தேவையில்லை. நாட்டையே முடக்கிப்போட்ட கோவிட்-19 அன்வாரின் பிரச்சார பலத்தையும் முடக்கிப் போட்டுவிட்டது.
இதுவே அண்மைக் காலமாக அவர் பலவீனமாகக் காட்சியளிப்பதற்கான காரணம். அவருக்குத் துணையாகவும் தூணாகவும் பல ஆண்டுகள் நின்ற அஸ்மின் அலி அவரை விட்டுப் பிரிந்தது – எதிரணியில் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்தது – எல்லாம் சேர்ந்து அடுத்த பிரதமராக வருவதற்குக் காத்திருந்த அன்வாரின் கனவுகளைச் சிதைத்தது. அவரின் அரசியல் பயணத்திலும் தொய்வையும், சோர்வையும் ஒருசேர விதைத்தது!
மலாக்கா – ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் தோல்விகள்
அடுத்தடுத்து மலாக்கா, ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் அவர் சந்தித்த
தோல்விகள் அவருக்கான ஆதரவு மக்களிடையே இனியும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அவர் வகுத்த சில தவறான வியூகங்கள்தாம்.
மலாக்கா தேர்தல் உருவானதே அவர் வகுத்த வியூகத்தினால்தான். கட்சி மாறி ஆட்சியைக் கவிழ்த்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தன் கட்சியில் போட்டியிட
இடம் அளித்த அவரின் அணுகுமுறை மக்களிடையே கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
சீர்திருத்த அரசியலை முன்னிறுத்தி முழங்கிய அவரே, கட்சித் தாவும் தவளைகளுக்கு வாய்ப்பளித்தது, கட்சிக்குள்ளும் வெளியேயும் அவரின் தோற்றத்தில் கறை ஏற்படுத்தியது.
மலாக்கா தேர்தலில் பிகேஆர் கட்சி ஒரேயொரு தொகுதியில்தான் வெற்றிபெற்றது. ஜோகூர் மாநிலத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க
முடியாதது அவரின் பலவீனத்தைக் காட்டியது. எல்லாவற்றுக்கும் மேலாக தான் தலைமையேற்கும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் சின்னத்தைப்
பயன்படுத்தாமல் பிகேஆர் கட்சியின் சொந்தச் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதும் – அதற்கு நேர்முரணாக ஜசெக, அமானா கட்சிகள் பக்காத்தான் சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதும் –
மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
தான் சார்ந்திருக்கும் கூட்டணி மீதே – அதன் சின்னத்தின் மீதே நம்பிக்கை
இன்றி இருக்கும் ஒரு தலைவரை நம்பி – மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
ஜோகூர் தேர்தல் முடிவுகள் பல அரசியல் பாடங்களை அவருக்கு மட்டுமன்றி அவர் சார்ந்த பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கும் தந்துள்ளன.
கடந்த காலங்களைப்போன்று மீண்டும் ஃபினிக்ஸ் பறவைபோல தோல்விகளில் இருந்து மீண்டும் எழுந்துவருவாரா அன்வார் இப்ராஹிம்?
காத்திருக்கின்றனர் அவரின் ஆதரவாளர்களும், பிகேஆர் கட்சியினரும்!