Home Photo News 15-வது பொதுத் தேர்தல் : எதிர்பாராத – அதிர்ச்சி தோல்விகள்! மலாய்– முஸ்லிம் வாக்குகள் மட்டும்...

15-வது பொதுத் தேர்தல் : எதிர்பாராத – அதிர்ச்சி தோல்விகள்! மலாய்– முஸ்லிம் வாக்குகள் மட்டும் காரணமா?

600
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் சில எதிர்பாராத அதிர்ச்சித் தோல்விகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தத் தோல்விகள் மலாய்– முஸ்லிம் வாக்குகளினால் மட்டும் நேர்ந்ததா? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)

விடிய விடிய பொதுத்தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, குறிப்பாக மலாய் வாக்காளர்களிடையே ஏற்பட்டிருக்கும் அரசியல் மனமாற்றங்களை புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.

கடந்த சில வருடங்களாக  வலுவானப் பிரச்சாரங்களால் கட்டமைக்கப்பட்ட மலாய்– முஸ்லிம் வாக்கு வங்கி  என்பது யார் பக்கம் செல்கிறதோ அவர்களே வெற்றியாளர்கள் என்பதற்கான அரசியல் திசைமாற்றம் மெல்ல மெல்ல இந்தப் பொதுத் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.

#TamilSchoolmychoice

குறிப்பாக,  மலாய் வாக்குகள் மூன்று அல்லது நான்கு அணிகளாகப் பிளவு படும் பட்சத்தில் இந்த தீவிரவாத மலாய்– முஸ்லிம் வாக்குகள் எந்தக் கூட்டணிக்குச் செல்கிறதோ – அதுவே வெற்றி வாகை சூடும் என்பதை – பொதுத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இந்த வாக்கு வங்கி நகர்வுகளினால்  பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பலம் பொருந்திய பல வேட்பாளர்கள் வீழ்ந்திருக்கிறார்கள். சில கட்சிகள் தங்களுக்குப் பாதுகாப்பான தொகுதிகள் எனக் கருதப்பட்ட தொகுதிகளில் தோல்வியைக் கண்டிருக்கின்றன.

சில உதாரணங்களைப் பார்ப்பதற்கு முன் மலாய்– முஸ்லிம் வாக்குப் பின்னணியைப் பார்ப்போம்.

1970ஆம் ஆண்டுகளில் மலாய் வாக்கு வங்கியை குறிவைத்த  அரசியல்

மலாயாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டபோது, மலாய்க்காரர்களின் உரிமைகள் –  குறிப்பாக, அவர்களின் மொழி–  கலாச்சாரத்தை எடுத்துக் காட்டும்  அரச பாரம்பரியங்கள்  – பாதுகாக்கப்பட வேண்டும் – என்பதே குறிக்கோளாக இருந்தது.

மலாய்க்காரர்களின் அரசியல் பிரதிநிதித்துவ கட்சியாகப் பார்க்கப்பட்ட அம்னோ அதற்கான போராட்டங்களை முன்னெடுத்தது. அம்னோவின் தலைவராக –  சுதந்திரத்திற்காக பிரிட்டிஷாருடன் பேச்சு வார்த்தை நடத்திய – துங்கு அப்துல் ரஹ்மான் ஓர் அரச வாரிசாகவும் இருந்ததால் மலாய் சுல்தான்கள் கட்டமைப்பு இந்த நாட்டில் நிலைநிறுத்தப்பட்டது.

முதலில் மூன்று இனங்களையும் ஒற்றுமைப்படுத்தி சுதந்திரம் பெற வேண்டும் என்பதே அன்றைய அரசியல் தலைவர்களின் முதல் குறிக்கோளாக இருந்தது. அதில் வெற்றியும் காணப்பட்டது.

ஆனால், 1969 பொதுத் தேர்தல் மலாய் வாக்காளர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியது.  தங்களின் அரசியல் பலம் எங்கே சீனர்கள் வசம் போய்விடுமோ என்ற அச்சம் மேலோங்கியது. அதன் விளைவுதான் மே 13 இனக்கலவரங்கள்.

1970ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்

துன் ரசாக்

துன் ரசாக் பிரதமராகப் பதவி ஏற்றதும் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய மொழி, மலாய் என்பது மறுஉறுதிபடுத்தப்பட்டு பள்ளிகளில் மைய மொழியாக மலாய் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலம் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டது.

அரசாங்க  வேலை வாய்ப்புகள்– வர்த்தக வேலை வாய்ப்புகள் – வணிக வாய்ப்புகள்– அரசாங்க குத்தகைகள் என எல்லாமே பூமிபுத்ராக்களுக்கு 30 விழுக்காடு என்ற கட்டாய நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டன.

நாளடைவில் இத்தகைய சலுகைகள் முழுக்க முழுக்க பூமிபுத்ராக்களுக்கு மட்டுமே என்ற நிலைமைக்கு மாறின. இந்த சூழ்நிலை நிரந்தரமாக்கப்பட்டதும் – உறுதியானதும் – மலாய்க்காரர்களிடையே ஒரு திருப்திகரமான– சொகுசான மனோ நிலை எழுந்தது.

இனி,  நமது உரிமைகளுக்கும் நமக்கான சலுகைகளுக்கும் ஆபத்தில்லை. எப்போதுமே இது தொடரும் என்ற எண்ணம் மலாய்க்காரர்களிடையே மேலோங்கியது. தங்களின் இந்த உரிமைகளையெல்லாம் பாதுக்காக்கக் கூடிய சிறந்த காவலன் அம்னோதான் என்ற நம்பிக்கை மலாய்க்கார்களிடையே எழுந்தது. பரவியது. அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் அம்னோ-தேசிய முன்னணி அபார வெற்றிகளைப் பதிவு செய்தது.

துங்கு ரசாலி ஹம்சா

சில வருடங்களுக்கு இந்த நிலைமை நீடித்தது. 1990-ஆம் ஆண்டில் அம்னோ பிளவு பட்டபோது துங்கு ரசாலி ஹம்சா, செமாங்காட் 46 என்ற பெயரில் புதிய மலாய் கட்சியை தோற்றுவித்து  அம்னோவை அரசியல் ரீதியாக வீழ்த்த முற்பட்டார்.

பாஸ் கட்சி அவருக்கு உடந்தையாக அந்தக் கூட்டணியில் இணைந்தது. இந்தக் கூட்டணியால் பாஸ் பலனும் பெற்றது. கிளந்தான் மாநிலத்தை மீண்டும் கைப்பற்றியது. பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த துங்கு ரசாலி தனது முயற்சியில் பின்வாங்கி மீண்டும் மகாதீரின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டு அம்னோவுக்கே திரும்பினார்.

அன்வார் முன்னெடுத்த பல இன அரசியல் – பாஸ் கட்சியை அன்வாரிடம் இருந்து பிரித்த நஜிப்

1998ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம் அம்னோவிலிருந்தும் துணைப் பிரதமர் பதவியில் இருந்தும் விலக்கப்பட்டது, மலாய்க்காரர்களிடையே இன்னோர் அரசியல் போராட்டத்திற்கு வித்திட்டது.

இந்த முறையும் அம்னோவை வீழ்த்தத் தயாரான அவரோடு கைகோத்தது பாஸ் கட்சி. 2008-2013 பொதுத்தேர்தல்களில் பாஸ் – பிகேஆர் – ஜசெக இணைந்து கூட்டணி அமைத்தது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஆனால், பின்னர் ஜசெகவின் இணைப்பைக் காரணம் காட்டி, பாஸ் பக்காத்தான் ராயாட் கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டது. பாஸ் கட்சியை அந்தக் கூட்டணியிலிருந்து பிரித்தெடுத்து, தனியாக இயங்கச் செய்ய பெரிதும் பாடுபட்டவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்.

பாஸ் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி வாக்குகள் சிதறும், தேசிய முன்னணி சுலபமாக வெற்றி பெறும் என்ற வியூகத்தை 2018-இல் செயல்படுத்தினார் நஜிப்.

ஆனால், 2018 பொதுத்தேர்தலில் நஜிப்பின் 1எம்டிபி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. துன் மகாதீர் தலைமையில் ஒன்றுபட்ட  கூட்டணிக் கட்சிகள் தேசிய முன்னணியை வீழ்த்தின. இதன் பிறகு மலாய்– முஸ்லிம் ஒற்றுமை என்ற பெயரிலான புதிய சித்தாந்தம் மலாய் வாக்காளர்களின் மனங்களில் அம்னோவால் விதைக்கப்பட்டது.

அரசியலில் பரம எதிரிகளான அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து முவாஃபாக்காட் நேஷனல் என்ற பெயரில் மலாய்– முஸ்லிம் கூட்டணி என்ற சித்தாந்தத்தை முன் வைத்தன.

அன்வார் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி பல இன அரசியலை முன்னெடுத்த வேளையில் மலாய் – முஸ்லிம் என்ற பெயரில் அம்னோ – பாஸ் எதிர் சித்தாந்தத்தை மலாய் வாக்காளர்களின் மனங்களில் விதைத்தனர்.

இதே மலாய்-முஸ்லீம் சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் ஷெராட்டன் நகர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டது. துன் மகாதீரின் பக்காத்தான் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

அந்த சித்தாந்தம்தான் 15ஆவது பொதுத்தேர்தலில் நிகழ்ந்த சில அதிரடி மாற்றங்களுக்கும் – சில பிரபல தலைவர்களின் தோல்விக்கும் காரணம்.

அம்னோ முன்வைத்த அந்த சித்தாந்தத்தை அழகாக அப்படியே தனக்கு சாதகமாக 15-வது பொதுத் தேர்தலில் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டார் டான்ஸ்ரீ முஹிடின் யாசின்.

பாஸ் கட்சியை தன்னுடன் இணைத்துக் கொள்வதில் அவர் வெற்றி அடைந்தார். அம்னோ – பாஸ் இணைந்து உருவாக்கிய முவாஃபாக்காட் கூட்டணியை முறியடித்து அதை அப்படியே – பெர்சத்து – பாஸ் இணைந்த கூட்டணிக்கான அடிப்படை சித்தாந்தமாக மாற்றிக் கொண்டார்.

அதன் காரணமாகவே பல இடங்களில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றிகளை அறுவடை செய்திருக்கிறது. அம்னோதான் தங்களைப் பாதுகாக்கப் போகும் அரசியல் பாதுகாவலன் என்ற நம்பிக்கை மலாய்க்காரர்களிடையே சிதைந்துவிட்டது.

மலாய்மொழி – உரிமைகள்- என்பதைத் தாண்டி பாஸ் கட்சியின் சாமர்த்தியமான பிரச்சாரங்களால் முஸ்லிம் உரிமைகளும்  மலாய் உரிமைகளோடு இணைக்கப்பட்ட புதிய சித்தாந்தம் இப்போது உருவாகி இருக்கிறது. இதற்கான பாதுகாவலன் பாஸ் இணைந்திருக்கும் பெரிக்காத்தான் கூட்டணி என்ற நம்பிக்கை விதைகளும் மலாய் வாக்காளர்கள் மத்தியில் தூவப்பட்டிருக்கின்றன.

பாக்காத்தான் ஹராப்பான் முன்னெடுக்கும் பல இன அரசியலுக்கு மாற்று சித்தாந்தமாக முன் வைக்கப்பட்டிருக்கும் மலாய்– முஸ்லிம் கூட்டணி சித்தாந்தம் மலாய் வாக்காளர்களிடையே  அதிகளவில்  செல்வாக்கைப் பெற்றிருக்கிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

15-வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்கள்

முதன் முறையாக பெர்லிஸ் மாநிலத்தில் 15 சட்டமன்றங்களில்  14ஐ வென்று பெரிக்காத்தான்  ஆட்சி அமைக்கிறது. பகாங் மாநிலத்திலும் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது.

பாஸ் கட்சியுடன் – பெர்சத்து என்ற இன்னொரு மலாய் கட்சியின் ஆதரவு வாக்குகள் இணைப்பால்  மலாய் வாக்குகள் பிளவுபடும் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பெரிக்காத்தானுக்கு கிடைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக அன்வார் இப்ராஹிமின்  கோட்டையாகக் கருதப்பட்ட பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அவரின் சொந்த மகளே தோல்வி அடைந்திருக்கிறார். அன்வாருக்கே, தம்புன் தொகுதியில் கிடைத்திருக்கும் எதிர்ப்பு வாக்குகள், ஆதரவு வாக்குகளைவிட மிக அதிகம்.

உலுசிலாங்கூர் போன்ற தொகுதிகளில்  பக்காத்தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மலாய்– முஸ்லிம் வாக்கு வங்கியால் வெற்றி பெரிக்காத்தானுக்குச் சென்றிருக்கிறது.

இன்னோர் உதாரணம் சுங்கை சிப்புட் தொகுதி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அந்தத் தொகுதியில் தீவிரமாக களப் பணியாற்றினார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன். ஆனால், பெரிக்காத்தான் சார்பில்  போட்டியிட்ட  பிரபலம் இல்லாத பெர்சாத்து வேட்பாளர் டத்தோஸ்ரீ இருதயநாதன் 8,190 வாக்குகள் பெற்றார். இந்த வாக்குகள் எல்லாம் பாஸ்– பெர்சத்து இணைந்த ஆதரவு வாக்குகள் என்பதை விளக்கத் தேவையில்லை.

கெடாவில்  அம்னோவின் உதவித் தலைவர் மாட்ஸிர் காலிட் தோல்விக்கும்  இதுதான் காரணம். டத்தோஸ்ரீ அசிஸ் தோல்வியடைந்த பாலிங் தொகுதியிலும் இதே காரணம்தான். இவ்வாறு பல உதாரணங்களைக் கூறலாம்.

ஸாஹிட் ஹமிடியின் சொந்தத் தொகுதியான பாகான் டத்தோக்கில் கூட அவரால்  348 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. ஆனால் இந்தத் தொகுதியில் இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றிருப்பது பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி.

மலாய்-முஸ்லீம் கூட்டணி என்று வரும்போதும் கட்சி மாறிய அரசியல் தவளைகளைக் கூட மலாய் வாக்காளர்கள் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள் என்பதை அவர்களில் சிலர் பெற்றிருக்கும் வெற்றிகளில் இருந்தும் – தோல்வியடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருப்பதிலிருந்தும் – காண முடிகிறது. பகாங் இண்ட்ரா மக்கோத்தா தொகுதியில் வெற்றி பெற்ற சைபுடின் அப்துல்லா, அதற்கோர் உதாரணம்.

வேட்புமனுத் தாக்கலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக அம்னோவில் இருந்து விலகி பெரிக்காத்தான் சின்னத்தில் ஆராவ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஷாஹிடான் காசிம், பகாங் மாரான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இஸ்மாயில் அப்துல் முத்தலீப் மற்ற சில உதாரணங்கள்.

மலாய்-முஸ்லீம் வாக்குகள் என்று வரும்போது கட்சி மாறும் கலாச்சாரத்தைக் கூட மன்னிக்கும் போக்கை இந்த முடிவுகள் காட்டியிருக்கின்றன.

இதே அடிப்படையில்தான், வாக்களிப்புக்கு ஒரு நாளுக்கு முன்பாக முஹிடின் யாசின் தெரிவித்த ‘யூதர்களும், கிறிஸ்துவர்களும் பக்காத்தான் ஹாரப்பானை ஆதரிக்கிறார்கள்’ என்ற கூற்றும், மலாய்-முஸ்லீம் வாக்காளர்களிடையே மனமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம் – அவர்களின் வாக்குகளை பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர்களுக்கு எதிராகத் திருப்பியிருக்கலாம் – என்ற கருத்தும் நம்பக் கூடியதாக இருக்கிறது.

இனி வரும் காலங்களில்  மலாய்– முஸ்லிம் கூட்டணி என்ற சித்தாந்தம் – 15ஆவது பொதுத்தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணிக்கு பெற்றுத் தந்திருக்கும் வெற்றியால் – மேலும் வலிமை பெறும்.

தேசிய முன்னணி ஒரு புறத்திலும் பாக்காத்தான் ஹராப்பான் இன்னொரு புறத்திலும் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்?

– இரா.முத்தரசன்