Home Photo News எம்ஜிஆர் கொடுத்த பாயசமும் அன்வார் கொடுத்த பாப் கார்னும்!

எம்ஜிஆர் கொடுத்த பாயசமும் அன்வார் கொடுத்த பாப் கார்னும்!

539
0
SHARE
Ad

  • ஒரு சாதாரண சமூகப் போராளி பிரதமராக உயர்ந்தது எப்படி?
  • 10-வது பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்க்கையைத் திசைமாற்றிய அந்த 10 சம்பவங்கள்

இரா.முத்தரசன்

1972ஆம் ஆண்டில், திமுகவிலிருந்து எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதியால் நீக்கப்பட்டார் என்ற செய்தி பரவத் தொடங்கியபோது, சத்யா ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் எம்ஜிஆர்.

ஊடகவியலாளர்கள் திபுதிபுவென சத்யா ஸ்டுடியோ நோக்கிக் குவியத் தொடங்கினர். எம்ஜிஆரோ தன் வீட்டிலிருந்து நிறைய பாயசம் தயாரித்து சத்யா ஸ்டுடியோவுக்குக் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

எம்ஜிஆர் வீட்டு கேரளா பாணி பாயசம் சுவையாக இருக்கும் என்பது சினிமா – அரசியல் வட்டாரங்களில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்று! பத்திரிகையாளர்கள் எம்ஜிஆரைச் சூழ்ந்து கொண்டு ‘அடுத்தது என்ன?’ என கேள்விக் கணைகளைத் தொடுத்தார்கள். எம்ஜிஆரோ, எந்தவித படபடப்பும் இன்றி அமைதியாக, எல்லாரையும் பார்த்து ‘எல்லாருக்கும் பாயசம் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். சாப்பிட்டு விட்டுப் போங்கள்’ என சிரித்துக் கொண்டே கூறினார்.

அதன்பிறகு அவர் நடத்திய வரலாற்று மாற்றங்கள் அனைவரும் அறிந்ததுதான்!

அன்வார் கொடுத்த பாப் கார்ன்

சரி! நிகழ்காலத்திற்கு வருவோம். நவம்பர் 23-ஆம் தேதி வியாழக்கிழமை! மாமன்னர் யாரை அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு நாடு முழுமையிலும் மக்களிடையேயும் ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த  தருணம்.

பத்திரிகையாளர்கள் அன்வாரின் இல்லத்தை முற்றுகையிட்டுக் குவிந்திருக்கின்றனர். அவரின் வீட்டுக் கதவுகள் திறக்கப்பட்டு, காரில் வெளியே வருகிறார் அன்வார். பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்ட போது, கார் கண்ணாடியை இறக்கி, அவர் சிரித்துக் கொண்டே கூறினார் : “ஒன்றுமில்லை! நான் பார்கார்ன் (சோளப்பொறி) சாப்பிட்டுக் கொண்டே திரைப்படம் பார்க்கச் செல்கிறேன். யாரும் பதட்டப்பட வேண்டாம். அமைதியாயிருங்கள். இந்தாருங்கள் உங்களுக்கும் கொடுக்கிறேன்” என சில பாப்கார்ன் பாக்கெட்டுகளை தன்னை நோக்கி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கொடுத்தார் அன்வார்.

அரசியல் மேடைகளில் எல்லாம் எம்ஜிஆரைப் போல் உருவத் தோற்றத்தோடும் – கையில் சாட்டையோடும் – முழக்கமிட்டவர் அன்வார்.

அரசியலில் உச்சகட்டத்தைத் தொடும் ஒரு தலைவன் திடீரென உருவாக்கப்படுவதில்லை. காலங்காலமாக அவன் வாழ்க்கையில் நிகழும் போராட்டச் சம்பவங்கள்தான் – பாளம் பாளமாக – அவனின் அரசியல் பாதையை செதுக்கின்றன. செப்பனிடுகின்றன.

ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் ஒரு தலைவன் எவ்வாறு பதட்டமின்றி செயல்படுகிறான் – எதிர்கால நகர்வுகளை வியூகத்தோடுக் கட்டமைக்கிறான் என்பதில்தான் அந்தத் தலைவனின் வெற்றியும் அடங்கியிருக்கிறது. அதற்கான உதாரணங்களாக, எம்ஜிஆர் பாயசம் கொடுத்தை சம்பவத்தையும், அன்வார் பாப் கார்ன் கொடுத்த சம்பவத்தையும் ஒப்பிடலாம்.

தமிழ் நாட்டில் எம்ஜிஆர் நிகழ்த்திய அரசியல் மாற்றங்களைப் போல, மலேசியாவிலும் அன்வார் இப்ராகிம் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமான – அவரின் வாழ்க்கையின் திசைகளை மாற்றியமைத்த – 10 சம்பவங்களை சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்த சம்பவங்கள் அன்வாரின் வாழ்க்கையை மட்டுமல்ல – மலேசிய அரசியலின்  போக்குகளையும் மாற்றியமைத்த வரலாற்று சம்பவங்களாகும்.

சம்பவம் #1 : பல்கலைக்கழகப் போராட்டமும் 2 ஆண்டு கால சிறைவாசமும்

1974-ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தின் சில பிரதேசங்களில் ரப்பர் விலை வீழ்ச்சியினால் மலாய்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும்  சிலர் வறுமை காரணமாக இறந்ததாகவும் தகவல்கள் பரவின.

அவர்களுக்கு ஆதரவாக அன்வார் இப்ராஹிம் தலைமையில்  மலாயா பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் வீதி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இரும்புக்கரம் கொண்டு காவல் துறையினர் அந்தப் போராட்டங்களை ஒடுக்கினர். சுமார் 1,500 மாணவர்கள் வரை காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அன்வார் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 20 மாதங்களுக்கு தைப்பிங், கமுண்டிங் சிறைச்சாலையில்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு சமூகப் போராளியாக 27ஆவது வயதில் அவரின் வாழ்க்கையை திசை திருப்பிய முதல் சம்பவமாக இந்த சிறைவாசத்தைக் குறிப்பிடலாம்.

சம்பவம் # 2 – 1982இல் அம்னோவில் இணைந்தார்

இளம் வயது முதல் அபிம் என்ற முஸ்லீம் இளைஞர் இயக்கத்தின் தலைவராக இஸ்லாமிய இயக்கங்களோடு அனைத்துலக அளவில்  தொடர்பு கொண்டிருந்தார் அன்வார். அதன் காரணமாக அவர் அரசியலில் நுழைவார் என்றும் அப்படி நுழைந்தால் பாஸ் கட்சியில்தான் இணைவார் என்றும் அவருக்கு நெருக்கமான பலரும் கருதினர்.

1981ஆம் ஆண்டில் பிரதமரானார் மகாதீர். அடுத்த ஓராண்டில் முதல் பொதுத்தேர்தலை அம்னோ – தேசிய முன்னணி தலைவராக 1982-இல் சந்தித்தார் மகாதீர்.

அப்போது ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில்  அன்வாரை தனது அருகில் அமர்த்திக் கொண்டு ‘அன்வார் அம்னோவில் இணைகிறார்’ என்றும் – வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் – என்றும் மகாதீர் அறிவித்தார்.

மலேசிய அரசியல் உலகம் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. அன்வாரை அம்னோவுக்குள் கொண்டு வந்ததன் மூலம் மகாதீரின் செல்வாக்கும் உயர்ந்தது. அதுவே அன்வாரின் வாழ்க்கையை திசைமாற்றிய இரண்டாவது சம்பவமாகும்.

சம்பவம் # 3 : அம்னோ இளைஞர் பகுதித் தலைவரானார்

அம்னோவில் இணைந்த அடுத்த ஆண்டில் நடைபெற்ற கட்சித் தேர்தலில் அம்னோவின் இளைஞர் பகுதி தலைவருக்குப் போட்டியிட்டார் அன்வார். அப்போதைய அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் ஹாஜி சுகாய்மி கமாருடின், அம்னோவின் செல்வாக்கு மிக்கத் தலைவராகத் திகழ்ந்தார்.

ஹாஜி சுகாய்மி கமாருடின்

சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த டத்தோ ஹருன் இட்ரிசுக்கு நெருக்கமானவர் சுகாய்மி. அம்னோவில் சேர்ந்த ஓராண்டிலேயே வலிமை வாய்ந்த நடப்பு இளைஞர் பகுதித் தலைவருக்கு எதிராக புதியவரான அன்வார் போட்டியிட்டுத் தோற்கடிக்க முடியுமா என அம்னோவின் ஆவலுடன் காத்திருந்தனர்.

அந்தப் போட்டியில் சுகாய்மியை தோற்கடித்து இளைஞர் பகுதித் தலைவரானார் அன்வார். தான் அம்னோவுக்கு மகாதீரின் அரவணைப்பால் மட்டும் வரவில்லை – கட்சித் தேர்தல் களத்திலும் தன்னால் போட்டியிட்டு வெல்ல முடியும் – என அன்வார் நிரூபித்த முதல் கட்சித் தேர்தல் அது. அன்வாரின் அம்னோ அரசியல் பயணத்தை வெற்றி கரமாகத் தொடக்கிய 3-வது சம்பவம் அது!

சம்பவம் # 4 : அம்னோவின் துணைத் தலைவர் – நாட்டின் துணைப் பிரதமர்

அம்னோவில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாற்றங்களும் துங்கு ரஸாலி ஹம்சா, மூசா ஹீத்தாம் ஆகியோரின் விலகல்களும் கட்சியில் வெற்றிடத்தை ஏற்படுத்தி அன்வார், அம்னோ அரசியலில் மேல்நோக்கி நகர வாய்ப்புகளை ஏற்படுத்தின.

துன் மூசா ஹீத்தாம்

1987இல் அம்னோ உதவித்தலைவராக  தேர்ந்தெடுக்கப்பட்ட அன்வார், 1991ஆம் ஆண்டில் நிதி அமைச்சரானார். அதன் மூலம் கிடைத்த அரசியல் செல்வாக்கால் 1993ஆம் ஆண்டில்  துன் கஃபார் பாபாவை எதிர்த்து  துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

துங்கு ரசாலி ஹம்சா

கஃபார் பாபா ஆதரவின்மையால் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஏகமனதாக துணைத் தலைவரானார் அன்வார். அதைத் தொடர்ந்து மகாதீருக்குக் கீழ் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார் அன்வார்.

இதுவே அவரின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய 4-வது சம்பவமாகக் குறிப்பிடலாம்.

1987-இல் அம்னோ தலைவராக வெற்றி பெற்ற மகாதீர் – துணைத் தலைவராக கபார் பாபா

அம்னோவில் சாதாரண உறுப்பினராக சேர்ந்து 11 ஆண்டுகளிலேயே கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் துணைப் பிரதமர் பதவியையும் எட்டிப் பிடித்த சாதனையை நிகழ்த்தியவர் அன்வார்.

சம்பவம் # 5 : அம்னோவிலிருந்து நீக்கமும் சிறைவாசமும்

1998 காலகட்டத்தில் அன்வாருக்கும்  மகாதீருக்கும் இடையில் நிகழ்ந்த கருத்து மோதல்களால் அன்வார் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

ஊழல் குற்றச்சாட்டுகளும் ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே – அவசர காலச் சட்டத்தின் கீழ் – அவர் சிறையில் தள்ளப்பட்டார். அந்த சர்ச்சைக்குரிய வழக்குகளினால் அவர் அடுத்த ஆறாண்டுகளுக்கு  சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.

அவரின் அரசியல் பயணத்தை மாற்றியமைத்த மூன்றாவது திருப்பமாக  இந்த சம்பவத்தைக் கூறலாம்.

சம்பவம் # 6 – 2008 பொதுத்தேர்தல் சுனாமியை ஏற்படுத்தினார்

அம்னோவிலிருந்து விலக்கப்பட்டதால், உடனடியாக மக்கள் நீதி கட்சி – பிகேஆர் – என்ற புதிய கட்சியை அவர் 1998-இல் தோற்றுவித்தார். அவரின் போராட்டத்தில் இறுதிவரை அவருடன் தோள்கொடுத்துத் துணைநின்ற அவரின் மனைவி வான் அசிசா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

அன்வாரின் அரசியல்  திசையை மாற்றிய 6-வது சம்பவம் 2008 பொதுத்தேர்தல். 6 ஆண்டுகால சிறைவாசம் முடிந்து 2004ஆம் ஆண்டில் விடுதலையான  அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு  போட்டியிட முடியாத சூழ்நிலையில்  2008 பொதுத்தேர்தல் வந்தது.

அந்தத் தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ராயாட் என்ற கூட்டணி அமைத்து அதில்  ஜசெக, பாஸ் போன்ற  எதிரும் புதிருமான கட்சிகளை  ஒருங்கிணைத்தார்.

2008 பொதுத்தேர்தலில் ஐந்து மாநில அரசாங்கங்கள் அவர் தலைமையிலான கூட்டணி வசம் வீழ்ந்தன. தேசிய முன்னணி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.

அன்வாரின் வாழ்க்கையை மட்டுமின்றி மலேசிய அரசியலையும் திசை மாற்றியமைத்த  6-வது சம்பவமாக 2008 பொதுத்தேர்தல் முடிவுகளைக் கூற முடியும்.

சம்பவம் # 7 – மீண்டும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக…

2009ஆம் ஆண்டில் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் சட்டரீதியான கட்டுப்பாடு முடிவுக்கு வர – மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். அவருக்காக நாடாளுமன்றத் தொகுதியை விட்டுக் கொடுத்தார் அவரின் மனைவி வான் அசிசா. அதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு வான் அசிசா நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியாது என்ற தியாகத்தையும் செய்ய வேண்டியிருந்தது.

அன்வார் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி, மலேசிய அரசியல் களத்தில் இணைந்தது அவரின் வாழ்க்கையில் 7-வது முக்கிய சம்பவமாகும்.

சம்பவம் # 8 – இரண்டாவது சிறைவாசம் – அன்வாரின் அரசியல் பயணம் முடிந்ததாக கணிப்புகள்

தொடர்ந்து 2013 பொதுத்தேர்தலிலும் அவர் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு வாக்குகளைப் பெற்று முன்னணி வகித்தாலும் ஆட்சியமைக்க போதுமான இடங்களைப் பெற பக்காத்தான் ராயாட் கூட்டணியால் இயலவில்லை.

பின்னர் இந்தக் கூட்டணியில் இருந்து பாஸ் விலகிக் கொள்ள, பக்காத்தான் ஹாரப்பான் என கூட்டணியும் பெயர் மாற்றம் கண்டது.

இந்த சமயத்தில் அவர் மீது இரண்டாவது முறையாக ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கிலும்  அவருக்கு 5 ஆண்டுகாலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அப்போது அவருக்கு வயது 67. இனிமேல் அவரின் அரசியல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இனியும் அவரில் அரசியலில் தலையெடுக்க முடியாது என்ற எண்ணமே எங்கும் மேலோங்கியிருக்கிறது. காரணம் ஐந்தாண்டுகாலச் சிறைத் தண்டனை முடிந்து வெளிவரும்போது அவருக்கு 72 வயதாகி இருக்கும்.

அவரின் உடல் நலம் – பலம் – எப்படி இருக்கும்? அப்படியே அவர் உடல் நலத்துடன் இருந்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட இன்னொரு 5 ஆண்டுகள் சட்டத்தில் காரணமாக காத்திருக்க வேண்டியிருக்கும்.

எனவே, அவரின் அரசியல் எதிர்காலம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே அனைவரும் கருதினர் என்பதால் அந்த 2-வது சிறைவாசமே அன்வாரின் வாழ்க்கையைத் திசை திருப்பிய 8-வது சம்பவமாகும்.

சம்பவம் # 9 – 2018 பொதுத்தேர்தல் – மீண்டும் விடுதலை – அரச மன்னிப்பு

2018 பொதுத்தேர்தல் மலேசிய அரசியலில் இன்னொரு சுனாமியை நிகழ்த்தியது. பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கொள்கை அறிக்கையிலேயே அன்வாரின் விடுதலை – தேர்தல் வாக்குறுதியாக  மக்களிடையே முன் வைக்கப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத்  தொடர்ந்து – அரச மன்னிப்பு மூலம் தனது அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு புதிய மனிதனாக வெளியே வந்தார் அன்வார். யாருமே எதிர்பாராத – கனவில் கூட நினைத்துப் பார்த்திர முடியாத – 9-வது சம்பவமாக இது அன்வாரின் வாழ்க்கையில் அமைந்தது.

அடுத்து, போர்ட்டிக்சன் தொகுதியில் உருவாக்கப்பட்ட இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 ஆண்டுகளில் துன் மகாதீர் வாக்குறுதி அளித்தபடி தனக்காக பிரதமர் பதவியை விட்டுக்கொடுப்பார் என்று காத்திருந்தார்.

மகாதீரோ பிரதமர் பதவியிலிருந்து விலகி வேறோர் அரசியல் நாடகத்தை அரங்கேற்றினார். மீண்டும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவராக அரசியலை முன்னெடுக்கத் தொடங்கினார் அன்வார்.

சம்பவம் # 10 – நாட்டின் 10-வது பிரதமராக…

அம்னோவின் நெருக்குதலால் 15ஆவது பொதுத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி பிரதமர் வேட்பாளராக  அதனை எதிர்கொண்டார் அன்வார்.

19 நவம்பர் 2022-இல் நடைபெற்ற நாட்டின் 15-வது பொதுத் தேர்தலில் தனித்து பெரும்பான்மை பெறமுடியாவிட்டாலும் – சில பரபரப்பான அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து நவம்பர் 24 ஆம் தேதி மலேசியாவின் 10ஆவது பிரதமராக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார் அன்வார்.

இதுவே, அவரின் வாழ்க்கைப் பயணத்தின் 10-வது முக்கிய சம்பவமாகக் கொள்ளலாம்.

1947-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிறந்தவர். எண் கணிதத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் கருத்துப்படி நாட்டின் 10-வது பிரதமராக அவர் பொருத்தமாகத் தேர்வு பெற்றிருக்கிறார்!

அவரின் தலைமையின் கீழ் ஒற்றுமைக் கூட்டணி அரசாங்கம் சிறப்பாக நாட்டை வழிநடத்த வாழ்த்துவோம்!

– இரா.முத்தரசன்