Home Photo News ஒரிசாவில் 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு – அதிகாரப்பூர்வ இணையத் தளம் திறப்பு

ஒரிசாவில் 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு – அதிகாரப்பூர்வ இணையத் தளம் திறப்பு

147
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அயலக இந்தியர்கள் ஒன்றுகூடும், இந்திய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சியான பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 18-வது மாநாடு எதிர்வரும் ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புபனேஸ்வரில் நடைபெறுகிறது.

9 ஜனவரி 2015-ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து தாய்நாடான இந்தியாவுக்குத் திரும்பியதையும், அதைத் தொடர்ந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தை அவர் முன்னெடுத்ததையும் நினைவு கூரும் பொருட்டு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவின் முக்கிய நகர்களில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் இந்த முறை பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு புபனேஸ்வரில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் ஒடிசா மாநிலத்தை முதன் முறையாக ஆளும் பாஜக கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் (pbdindia.gov.in) வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ஆகியோரால் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி (2024) இணைந்து இயங்கலை மூலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்கும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

பிரவாசி பாரதிய திவாஸ் (PBD) மாநாடு இந்திய அரசின் முக்கிய நிகழ்வாகும். வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருடன் இந்திய அரசாங்கம் தொடர்பு கொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முக்கிய தளமாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு ஒடிசா மாநில அரசுடன் இணைந்து ஜனவரி 08-10, 2025 வரை புபுனேஸ்வர், ஒடிசாவில் நடத்தப்படுகிறது.

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி உரையாற்றுகிறார்

2025ஆம் ஆண்டிற்கான மாநாட்டின் கருப்பொருள் “விக்சித் (வளர்ச்சியடைந்த) பாரதத்திற்கான வம்சாவளியினரின் பங்களிப்பு”. பிரதமர் நரேந்திர மோடி திந்த மாநாட்டைத் தொடங்கி வைப்பார். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து பிரவாசி பாரதிய திவாஸ் இளைஞர் பதிப்பும் நடைபெறும். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பிரவாசி பாரதிய சம்மான் விருதுகளை வழங்கி, நிறைவு அமர்வுக்கு தலைமை தாங்குவார்.

பிரவாசி பாரதிய திவாஸ் இணையத் தளத்தின் தொடக்கம், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கான இணையம் வழி பதிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த இணையத்தளம் ஒடிசாவில் தங்குமிட முன்பதிவையும் வசதிப்படுத்தி, மாநாடு பற்றிய விரிவான தகவல்களையும் வழங்கும்.

இணையத் தளத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் இந்திய அரசு 3.5 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரின் நலனுக்கு மிக உயர்ந்த முன்னுரிமை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் வெளிநாட்டு அதிகாரப்பூர்வ பயணங்களின் போது வம்சாவளியினருடனான தொடர்ச்சியான உரையாடல்களும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர்களின் உறுதியான ஆதரவும், இந்தியாவுக்கும் அதன் உலகளாவிய சமூகத்திற்கும் இடையேயான வலுவான பிணைப்புகளுக்கு சான்றாக உள்ளன. விக்சித் பாரத்தை (வளர்ச்சி பெற்ற இந்தியா) நோக்கிய இந்தியாவின் பயணத்தில் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கையை தனதுரையில் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இதே நிகழ்ச்சியில் உரையாற்றிய ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி, வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினரை ஒடிசாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர்கள் ஒடிசாவின் வளமான வரலாற்று, கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை நேரில் கண்டு பாராட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாநாட்டில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்குமாறு இந்திய வம்சாவளியினரை ஊக்குவிப்பதாகவும் அவர் அறிவித்தார்.