Home நாடு விஸ்வரூபம்: தமிழ் நாட்டில் தடை நீங்கியதால் மலேசியாவிலும் தடை நீங்குமா?

விஸ்வரூபம்: தமிழ் நாட்டில் தடை நீங்கியதால் மலேசியாவிலும் தடை நீங்குமா?

750
0
SHARE
Ad

Kamal-Vishwaroopam-sliderஜனவரி 30 – தமிழ் நாட்டில் விஸ்வரூபம் படத்திற்கான தடையை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று நீக்கியதைத் தொடர்ந்து மலேசியாவிலும் இந்த படம் திரையிடப்படுமா என்ற ஆர்வம் மலேசிய சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த சில நாட்களாக, மலேசியாவின் பல்வேறு கலாச்சார அமைப்புக்களும், சமூகத் தலைவர்களும் விஸ்வரூபம் படத்தை மீண்டும் மலேசியாவில் திரையிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மலேசியாவில் திரையிடப்பட்டு ஒரிரு நாட்கள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்த விஸ்வரூபம் திடீரென நிறுத்தப்பட்டது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

அதிலும் குறிப்பாக தைப்பூசத்தை முன்னிட்டு கிடைத்த நீண்ட, வாரக் கடைசி விடுமுறையில் படத்தைப் பார்ப்பதற்கு பலர் ஆவலாக இருந்தனர்.

இந்த சமயத்தில் கிம்மாவும் சில இந்திய முஸ்லீம் அமைப்புக்களும் கொடுத்த புகாரின் அடிப்படையில் உள்துறை அமைச்சு இந்த படத்தை தடை செய்ததாக அறிவிப்பு வெளியானது.

இருப்பினும், இந்த முடிவு மறுபரிசீலனை  செய்யப்படுகின்றதா, ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் மீண்டும் திரையிடப்படுமா என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை எந்த தரப்பிலிருந்தும் பதில் இல்லை.

இதற்கிடையில் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் விஸ்வரூபம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. தடைகளால் ஏற்பட்ட விளம்பரம் மற்றும் படம் குறித்த சர்ச்சைகளால் ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு ஏராளமானோர் படத்தைப் பார்க்க வரிசை பிடித்து நிற்கின்றனர்.

குறிப்பாக, ஆந்திராவிலும், கேரளாவிலும் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதோடு, இந்த மாநிலங்களின் எல்லைகளில் வசிக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்ப்பதற்காக அண்டை மாநில திரையரங்குகளுக்கு சென்று வருகின்றார்கள்.

அமெரிக்காவிலேயே ஆங்கிலப் படங்களுக்கு நிகராக விஸ்வரூபம் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதோடு, வசூலிலும் சாதனை படைத்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து மலேசியாவிலும் திரையிடப்பட்டால் இந்த படத்தை பார்க்கத் துடித்துக் கொண்டிருக்கும்  ரசிகர்களின் ஆதரவால் நமது நாட்டிலும் இந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.