ஜனவரி 30 – விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. மேல் முறையீடு விசாரிக்கப்படும் வரை விஸ்வரூபம் படத்தை திரையிடலாம் என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசின் சார்பாக விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதி கே.வெங்கட்ராமன் நிராகரித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று புதன்கிழமை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்படும்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்குரைஞர்கள், நீதிபதி எலிபி தர்மாராவின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மாராவ் தலைமையிலான முதல் அமர்வு முன்னிலையில் “விஸ்வரூபம்’ திரைப்படம் தொடர்பான மேல்முறையீடு இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது.
உயர்நீதிமன்றம் படத்துக்கான தடையை நீக்கி தீர்ப்பு வழங்கிய பின்னரும் தமிழக அரசு விடாப்பிடியாக இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்வது, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.