கேமரன்மலை,ஜன.30- அதிக பூர்வ குடிமக்களைக் கொண்டது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி. கடந்த பொதுத்தேர்தலைக் காட்டிலும் தற்போது திடீரென்று 8 சதவீத பூர்வகுடியினரின் வாக்குகள் இந்த தொகுதியில் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
“2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் ம.இ.கா. வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை பொதுத்தேர்தலில் தோல்வியை தழுவி விடுமோ என்ற அச்சத்தில் தே.மு. இருக்கிறது. அதனால்தானா என்னவோ பூர்வக்குடி வாக்காளர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து இருக்கிறது” என்று பகாங் மாநில ஜ.செ.க துணைத்தலைவர் ஜே.சிம்மாதிரி கருத்துரைத்தார்.
கடந்த 55 ஆண்டுகளாக 3,000 வாக்காளர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை எவ்வாறு 6,000 ஆக உயர்ந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போஸ் பெத்தாவ் என்ற கிராமத்தில் 600 மேற்பட்ட வாக்காளர்களே உள்ளனர். ஆனால் தற்போது அங்கே 1,200 வாக்காளர்கள் ஆக உயர்ந்தது எவ்வாறு என்பது மிகவும் ஆச்சிரியமான விஷயமாகும் என்றார் அவர்.