சென்னை: தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை எதிர்பார்த்தபடி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக கட்சியில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
தனது கோபிசெட்டிப் பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து செங்கோட்டையன் நேற்று விலகினார்.
சட்டமன்ற அவைத் தலைவர் அப்பாவுவிடம் செங்கோட்டையன் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து கோபிசெட்டிப் பாளையம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் சில மாதங்களில் தமிழ் நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் இடைத் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை.
பதவி விலகலைத் தொடர்ந்து விஜய் இல்லத்திற்கு பிற்பகலில் செங்கோட்டையன் சென்றார். தவெக பிரமுகர் ஆதவ் அர்ஜூனாவின் காரில் அவர் விஜய் இல்லத்திற்கு சென்றார்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, தவெக கட்சியில் சேர்வதற்கு முன்பே செங்கோட்டையன் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கருதப்படுகிறது.




