Home நாடு “5 மில்லியன் ரிங்கிட் எங்களுக்குத் தரப்படவில்லை” – மனம் திறந்தார் பாலாவின் மனைவி

“5 மில்லியன் ரிங்கிட் எங்களுக்குத் தரப்படவில்லை” – மனம் திறந்தார் பாலாவின் மனைவி

697
0
SHARE
Ad

bala-najib

ரவாங், ஏப்ரல் 30 – மறைந்த தனியார் துப்பறிவாளர் பாலாவின் மனைவியான செந்தமிழ் செல்வி முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து, தனது கணவர் சம்பந்தப்பட்ட பல உண்மைகளை தற்போது மனம் திறந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதற்கு காரணம், தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, தனக்கு நிறைய மர்ம தொலைப்பேசி அழைப்புக்கள் வருவதாகவும், பிகேஆர் தான் பணம் கொடுத்து பாலாவின் முதலாவது சத்தியப் பிரமாணத்தை பதிவு செய்ய வைத்தது என்று கூறும் படி அவர்கள் தன்னை வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இது தவிர கடந்த மாதம் தனக்கு வந்த குறுஞ்செய்தியில், பாலாவிற்கு வழக்கறிஞர்கள் தான் பணம் கொடுத்தார்கள் என்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இது குறித்து செல்வி செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

“அல்தான்துன்யா கொலை தொடர்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் தேதி அன்று காலை எனது கணவர் பாலா, பிகேஆர் தலைமையகத்திலிருந்து செய்தியாளர்களை சந்தித்து அப்போதைய துணைப்பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நஜிப் துன் ரசாக்கை சம்பந்தப்படுத்தி முதலாவது சத்தியப் பிரமாணத்தை பதிவு செய்தார்.”

“அதன் பின் அன்றைய தினத்தில் மதியம் 2 மணிக்கு தான் பாலா வீடு திரும்பினார். அப்போது அவருடன் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த ஏ.எஸ்.பி சுரேஸ் ஆகியோர் இருந்தனர். வழக்கத்தை விட மிகவும் கவலையாகவும், சோர்வாகவும் இருந்த பாலாவிடம் நான் பேச முயன்ற போது, “என்னால் பேச முடியாது. நீ சுரேஸிடம் பேசிக்கொள்” என்று கூறிவிட்டார்.”

“பிறகு சுரேஸ் தான் என்னிடம் துணைப்பிரதமர் நஜிப், பாலாவிற்கு 5 மில்லியன் ரிங்கிட் வழங்கவுள்ளதாகவும், அது தவிர மாதம் 20,000 ரிங்கிட் மற்றும் பிள்ளைகளுக்கு கல்வி உதவி ஆகியவை வழங்குவதாகவும் தெரிவித்தார். அத்துடன் நஜிப் பிரதமர் ஆகும் வரை சில மாதங்களுக்கு எங்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அனுப்பவிருப்பதாகவும் தெரிவித்தார்.”

“அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் எங்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட பல ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, நாங்கள் குடுப்பத்துடன் சிங்கப்பூர் வழியாக பேங்காக் அனுப்பப்பட்டோம். அதற்கு முன்பாக கோலாலம்பூர் விமான நிலையத்தில், பாலா செய்தியாளர்களை சந்தித்து தனது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்தார்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பணியிலிருந்த இருந்த அதிகாரி, எங்களது பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தில் நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகள் அணிந்திருப்பதை கவனித்துவிட்டார். இதனால் எங்களது ஆவணங்கள் அவசரமாகத் தயாரிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் அவருக்கும் வந்தது. ஆனால் சில கேள்விகளுக்குப் பிறகு நாங்கள் பேங்காக் செல்ல அனுமதிக்கப்பட்டோம்.”

பாஸ்போர்ட் திரும்பப்பெறப்பட்டது

“பேங்காக்கிலிருந்து நேபால் சென்றோம். பிறகு இந்தியாவில் புதுடில்லி, சென்னை, மதுரை ஆகிய இடங்களுக்கு சென்றோம். எங்களுக்குத் தேவையான பணத்தை சுரேஸ் தான் அனுப்பி வைத்தார். அவ்வப்போது எங்களை தொலைப்பேசியில் அழைத்து பயணங்களில் வழிநடத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் நாங்கள் மதுரையை அடைந்த போது எங்களுக்கு பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.அதன் பின் சுரேஸின் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, ஒரு அகதிகளைப் போல் தமிழ்நாட்டில் விடப்பட்டோம்.அதன் பின், பாலா தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் எங்களுக்கு புதிய பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளைப் பெற்றார்.”

வசதியான வாழ்க்கை இல்லைBALA

“இந்தியாவில் மிகவும் ஏழ்மையான நிலையில் தான் வாழ்ந்தோம். எங்களுக்கு கொடுக்கப்படுவதாகச் சொன்ன 5 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்படவில்லை என்பதே உண்மை. பிறகு வேறுவழியில்லாமல் மீண்டும் மலேசியாவிற்கே கடந்த பிப்ரவரி மாதம் திரும்ப வந்தோம்.

சுரேஸ் எங்களுக்கு தருவதாகக் கூறிய 5 மில்லியன் ரிங்கிட்டை நாங்கள் பெற்றிருந்தால் என் பிள்ளைகள் இந்நேரம் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்திருப்பார்களே தவிர, இப்படி படிக்க வசதியில்லாமல், யாருடைய உதவியுமின்றி ஏழ்மையில் தவித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியதைத் தவிர, நாங்கள் வேறு என்ன தவறு செய்தோம்.

மேலும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த பாலாவின் இறப்பை என்னால் இன்றுவரை  நம்பவே முடியவில்லை. அவர் இறப்பதற்கு அன்று காலை கூட மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டார்” என்று செல்வி வருத்தத்துடன் கூறினார்.