புத்ரா ஜெயா : 2006-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் படுகொலை செய்யப்பட்ட அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நடத்தி வரும் நீதிமன்ற – சட்டப் போராட்டங்களில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) வழக்கொன்றில் வெற்றி பெற்றனர்.
அந்தக் கொலை வழக்கு தொடர்பில் காவல் துறையினர் பதிவு செய்த சாட்சிகளின் வாக்குமூலங்களைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என அல்தான்துயா குடும்பத்தினர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
அல்தான்துயா தொடர்பான வழக்கு நடைபெற்றபோது, நீதிமன்றத்தில் சாட்சியமளித்தவர்கள், சாட்சியமளிக்காதவர்கள் என அனைவரின் வாக்குமூலங்களையும் தங்களுக்கு வழங்க வேண்டுமென அவரின் குடும்பத்தினர் மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.
ஆனால் அந்த மனுவை கடந்த ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி ஷா ஆலாம் உயர்நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்தது.
ஷா ஆலாம் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அல்தான்துயா குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மேல்முறையீட்டை நேற்று விசாரித்த நீதிமன்றம் சாட்சியாளர்களின் வாக்குமூலங்களை வெளியிடலாம் அவை இரகசியமானது அல்ல எனத் தீர்ப்பளித்தனர்.
இந்த வாக்குமூலங்களை அரசாங்கத்திற்கு எதிராகத் தாங்கள் தொடுத்திருக்கும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பொது (சிவில்) வழக்கில் பயன்படுத்தப் போவதாகவும் அல்தான்துயா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal