Home Photo News ஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா?

ஹாமிட் சுல்தானின் நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம் வெற்றி பெறுமா?

670
0
SHARE
Ad

(மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹாமிட் சுல்தான் அபு பாக்கார் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். ஆனால் அந்தத் தேதிக்கும் முன்னர் 6 மாத காலத்திற்கு அவர் நீதிபதி பொறுப்பிலிருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருந்தார். ஏன் இந்த இடைநீக்கம்? அவர் செய்த தவறுகள் என்ன? நீதித்துறையில் முறைகேடுகளுக்கு எதிராக அவர் தொடங்கிய போராட்டம் வெற்றிபெறுமா? தனது பார்வையில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மலேசிய நீதித்துறை வரலாற்றில் இந்தியர்கள் சிலர் நீதிபதிகளாகப் பதவி வகித்திருக்கின்றனர். ஆனால் அவர்களுள் நன்கு தமிழறிந்த – இன்னும் சொல்லப் போனால் தமிழ்ப் புலமை வாய்ந்த நீதிபதி – யாராவது இருந்திருப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால் மேல்முறையீட்டு நீதிபதியாக அண்மையில் தமது பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஹாமிட் சுல்தான் அபு பக்கார், ஆழமான தமிழறிவுகொண்டவர்.  அவர் வழக்கறிஞராகப் பணியாற்றிய  காலகட்டத்தில் அவருடன் பழகியவர்கள் அவரின் சரளமான, தெளிவான தமிழ் உச்சரிப்பு நடையையும், தமிழ் அறிவையும் அறிந்திருப்பார்கள்.

#TamilSchoolmychoice

நீதித்துறைக்கு எதிரான ஒரு போராட்டத்தை, நீதிபதி பதவியில் இருந்தபோது தொடங்கிய அவர், அந்தப் போராட்டம் நிறைவுபெறாமலேயே தமது பதவியிலிருந்து ஓய்வு பெறும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.

ஏன் அந்தப் போராட்டம்? அதன் பின்னணி என்ன?

ஹாமிட் சுல்தான்னின் வழக்கறிஞர் தொழில் பயணம்

பொருளாதாரத் துறையில் பட்டம்பெற்றவர் ஹாமிட் சுல்தான். பின்னர் சட்டத் துறையிலும் பட்டம் பெற்றார். வழக்குத் தொடுக்கும் தரப்புகளுக்கிடையில் மத்தியஸ்தம் (Arbitration) செய்யும் பணியில் வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.

மிகப் பெரும் பணம் சிக்கிக் கொண்டிருக்கும் வழக்குகளிலும், தொழில்நுட்பம் அதிகம் சார்ந்த வழக்குகளிலும், நீதிமன்றத்தை நாடும் இரண்டு தரப்புகளும் முதலில் மேற்குறிப்பிட்ட ஆர்பிட்ரேஷன் எனப்படும் மத்தியஸ்த நடைமுறையைப் பின்பற்றி,  சமாதானமான முறையில் தங்களின் வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள இப்போதெல்லாம் அதிகமாக முனைகிறார்கள். அத்தகைய மத்தியஸ்த பணிகளை வழக்கறிஞர்களே மேற்கொள்வார்கள். இந்தப் பணியில்தான் ஹாமிட் சுல்தான் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் தீவிர ஈடுபாடு காட்டி வந்தார்.

இலண்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பையும் அவர் சட்டத்துறையில் பெற்றிருக்கிறார். காப்புறுதி, கடல்சார் சட்டங்கள், ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டங்கள் ஆகிய துறைகளில் அவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.

இஸ்வாமிய வங்கித்துறை, நிதித்துறை,  இஸ்லாமிய சட்டங்கள் ஆகிய துறைகளில் மலேசிய இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திலும் அவர் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.

சட்டத்துறையில் முனைவர் பட்டத்தையும் அவர் பெற்றிருக்கிறார். சிவில் எனப்படும் பொது வழக்கு நடைமுறைகள், நீதிப் பரிபாலனம் ஆகிய துறைகளிலும் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தில் பல பதவிகளை வகித்திருக்கும் அவர் சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து  பல நூல்களையுப் எழுதியிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய சத்தியப் பிரமாண ஆவணம் தாக்கல் செய்த ஹாமிட் சுல்தான்

மார்ச் 2007ஆம் ஆண்டில் முதன் முதலில் அவர் நீதித்துறை ஆணையராக (Judicial Commissioner) நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிபதியாக (Court of Appeal Judge) நியமனம் பெற்றார்.

கடந்த 14 ஆண்டுகளாக அவர் நீதிபதியாக அந்தப் பதவிகளை அலங்கரித்த காலகட்டத்தில், சட்ட நுணுக்கங்களோடு கூடிய பல முக்கியத் தீர்ப்புகளை அவர் வழங்கியிருக்கின்றார்.

மேல்முறையீட்டு நீதிபதியாக இருந்த காலகட்டத்தில்,  14 பிப்ரவரி 2019-ஆம் நாள் அவர் தாக்கல் செய்த சத்தியப் பிரமாண அறிக்கை ஒன்று நீதித்துறை வரலாற்றில் பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

நீதித்துறையில் நிகழ்ந்த அதிகார விதிமீறல்கள், மோசடிகள் ஆகியவை குறித்து தனது சத்தியப் பிரமாண ஆவணத்தில் அவர் பட்டியலிட்டிருந்தார். அந்த சத்தியப் பிரமாணத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது நீதித் துறையால் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

அவரின் சத்தியப் பிரமாண அறிக்கை மீது, அரச விசாரணை ஆணையம் (RCI – Royal Commission of Inquiry) நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல தரப்புகளில் இருந்தும் எழுந்தன. ஆனால் அதற்கு நேர் எதிர் மாறாக ஹாமிட் சுல்தானின் சத்தியப்பிரமாண அறிக்கை மீது விசாரணை ஒன்றை நீதித்துறை தொடங்கியது.

நீதிபதிகளுக்கான நன்னெறி நடத்தைக் குழு (Judges Ethics Committee) ஹாமிட் சுல்தான் மீதான விசாரணையைத் தொடங்கியது. விசாரணையின் முடிவில் அவர் பதவி ஓய்வுபெற 6 மாதங்களே எஞ்சியிருந்த நிலையில் அவரை அந்த 6 மாதங்களுக்கு நீதிபதி பொறுப்பிலிருந்தே இடைக்காலமாக நீக்கி வைக்கும் (Suspension) முடிவை நீதிபதிகளுக்கான நன்னெறி நடத்தைக் குழு அறிவித்தது.

அந்த 6 மாதக் கால இடைநீக்கம் இந்த ஆண்டு, ஆகஸ்டு 27ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதே தேதியில் அவர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் தனக்கு நேர்ந்த இந்தப் பிரச்சனையைப் பற்றி அவர் கவலைப்படாமல், துவண்டு விடாமல், அந்த இடைக்கால நீக்கம் அமுலில் இருந்த காலத்தில், தனது ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி, மேலும் மூன்று புதிய சட்ட நூல்களை எழுதுவதில் தனது நேரத்தையும், கவனத்தையும் ஹாமிட் சுல்தான் செலவிட்டார்.

நிறுவனங்களுக்கான சட்டம் (Company Law), கட்டுமானத்துறை சட்டம் (Construction Law), மலேசிய அரசியலமைப்புச் சட்டம் (Malaysian Constitution) என வெவ்வேறு சட்ட அம்சங்கள் குறித்த மூன்று நூல்களை அவர் பதிப்பித்தார். இவற்றோடு இதுவரை அவர் 10 சட்ட நூல்களை எழுதியிருக்கின்றார்.

தமிழிலும் வெளிவரும் ஹாமிட் சுல்தானின் மலேசிய அரசியலமைப்புச் சட்ட நூல்

ஹாமிட் சுல்தான் தற்போது எழுதி வெளியிட்டிருக்கும் மலேசிய அரசியலமைப்புச் சட்டம் குறித்த நூல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியலமைப்புச் சட்ட சர்ச்சைகள் குறித்த காலகட்டத்தில் முக்கியமானதாகவும், பொருத்தமானதாகவும் கருதப்படுகிறது. அதன் காரணமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் மலாய் மொழியிலும் தமிழ்மொழியிலும் மொழிபெயர்க்கப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வழக்குத் தொடுக்கும் தரப்புகளுக்கு இடையே மத்தியஸ்தம் ஙெ்ய்யும் பணியில் தீவிர ஆர்வம் காட்டிவரும் ஹாமிட் சுல்தான், ஓய்வுக்குப் பிறகு அந்தத் துறையில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் அந்தப் பணியில் அனைத்துலக அளவில் ஈடுபடப் போவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது பதவி ஓய்வுக்குப் பின்னர் அவர் விடுத்த அறிக்கையில், “நான் ஒரு நீதிபதியாக எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணத்திற்கு ஏற்ப என் கடமைகளையும் பொறுப்புகளையும் நாட்டிற்கு ஆற்றியிருக்கின்றேன். சட்டத்தையும், ருக்குன் நெகாரா கோட்பாடுகளையும் மதித்து நடந்திருக்கின்றேன். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் தற்காக்கவும் எனது சத்தியப் பிரமாணத்தின் வழி நான் உறுதிமொழி எடுத்தேன். நான் எதிர்கொண்ட சவாலுக்கு இடையிலும் எனது சத்தியப் பிரமாண உறுதிமொழியை நான் நேர்மையுடன் கடைப்பிடித்தேன் என்பதில் பெருமைகொள்கிறேன்” என்று ஹாமிட் சுல்தான் கூறியிருக்கிறார்.

ஹாமிட் சுல்தானின் போராட்டம் வெற்றி பெறுமா?

ஹாமிட் சுல்தான் நீதிபதி பதவியிலிருந்து இடைகால நீக்கம் செய்யப்பட்டதோடு, நீதித்துறையில் நிகழ்ந்த முறைகேடுகள் மீதான அவரின் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்கள் அவரின் போராட்டம் இன்னும் முற்றுப்பெறவில்லை – முடியவில்லை. தொடரப் போகின்றன என்பதற்கான வெளிச்சக் கீற்றுகளைப் பரப்பியிருக்கின்றன.

முதலாவதாக முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் எழுதிய நூல் ஒன்றின் அடிப்படையில் நீதித்துறை மீதான அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

நீதித்துறைக்கு எதிரான அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார். ஆனால் இது குறித்து பிரதமர் இஸ்மாயில் சாப்ரி இன்னும் எந்தக் கருத்தையும் கூறவில்லை.

ஹானிப் காத்ரி அப்துல்லா

மற்றொரு மூத்த வழக்கறிஞரான ஹனிப் கத்ரி அப்துல்லா, ஹாமிட் சுல்தான் போராட்டத்திற்கு ஆதரவாக வாதம் ஒன்றை முன்வைத்திருக்கின்றார். அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படும்போது, ஹாமிட் சுல்தான்14.2.2019-ஆம் நாள் சமர்ப்பித்த சத்தியப்பிரமாண அறிக்கையின் முழு விவரங்களும் அந்த விசாரணையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் எனப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் ஹனிப் கத்ரி அப்துல்லா.

ஹாமிட் சுல்தானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் வழக்கறிஞர்கள் குழு

இன்னொரு முனையில் 15 வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு குழுவினர், ஹாமிட் சுல்தானின் இடைக்கால நீக்கம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என சுஹாகாம் எனப்படும் மனித உரிமை ஆணையத்திடம் கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த இரண்டு முனை நடவடிக்கைகளின் மூலம் ஹாமிட் சுல்தான் தொடங்கிய நீதித்துறை முறைகேடுகளுக்கு எதிரானப் போராட்டம், அப்படியே முடக்கப்பட்டுவிடாமல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு வெளி வந்திருக்கிறது.

அந்தப் போராட்டத்தில் எதிர்வரும் காலத்தில் அவர் வெற்றிபெறுவாரா?

அரச விசாரணை ஆணையம் அவரின் சர்ச்சைக்குரிய சத்தியப் பிரமாணத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமா?

அவரின் இடைக்காலப் பதவி நீக்கம் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படுமா?

கேள்விகளோடு காத்திருக்கின்றனர், மலேசிய சட்டத் துறை உலகமும், நீதித் துறையும், பொதுமக்களும்!

-இரா.முத்தரசன்