Home நாடு தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து இயங்கலாம் – மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து இயங்கலாம் – மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

423
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: நாட்டில் இயங்கும் சீன-தமிழ் மொழிகளைப் போதிக்கும் தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில்  இன்று வியாழக்கிழமை (நவம்பர் 23)  3 நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அதன்படி இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் சட்டபூர்வமாக மலேசிய அரசியல் சாசனப்படியே இயங்குவதாக மேல்மறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.

மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வுக்கு சுப்பாங் லியான் தலைமை வகித்தார். அவருடன் மற்ற நீதிபதிகளாக எம்.குணாளன்,  அசிசுல் அஸ்மின் அட்னான் இருவரும் செயல்பட்டனர்.

#TamilSchoolmychoice

சில மலாய், முஸ்லீம் சார்பு அரசு சாரா இயக்கங்கள் இந்த வழக்கைத் தொடுத்திருந்தன.

நீதிபதிகளின் ஒருமனதான தீர்ப்பை நீதிபதி அசிசுல் வாசித்தார்.

சுதந்திரத்திற்கு முன்னர் நாட்டில் இயங்கி வந்த தாய்மொழிப் பள்ளிகள்  சுதந்திரத்திற்கு பின்னரும் தொடர்ந்து இயங்கி வர வேண்டும் என  நமது மலேசிய அரசியல் சட்டத்தை வரைந்தவர்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர் என தீர்ப்பை வழங்கிய நீதிபதி குறிப்பிட்டார்.

மாண்டரின், தமிழ் மொழிகள் தாய்மொழிப் பள்ளிகளில் தொடர்ந்து போதிக்கப்பட்ட நமது அரசியல் சாசனம் அனுமதிப்பதாகவும் நீதிபதி கூறினார்.

நாட்டின் தேசிய மொழியாகவும் பள்ளிகளின் பயிற்று மொழியாகவும் மலாய் மொழி திகழ்ந்தாலும் தாய்மொழிப் பள்ளிகளில் மாண்டரின், தமிழ் மொழி இரண்டையும்  மைய மொழியாக கற்பிப்பதில் தடையேதும் அரசியல் சாசனத்தில் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. வழக்கை தொடுத்திருந்த இயக்கங்கள் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கின் முடிவைத் தொடர்ந்து வழக்கு தொடுத்த இயக்கங்களின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் ஹானிஃப் காத்ரி அப்துல்லா, தீர்ப்புக்கு எதிராக கூட்டரசு நீதிமன்றத்திற்கு தாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.