புத்ரா ஜெயா: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தன் எஞ்சிய சிறைவாச காலத்தை இனி வீட்டுக் காவலில் கழிக்கலாம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
3 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மை என்ற நிலையில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
முன்னாள் மாமன்னர் வழங்கிய துணை உத்தரவுக் கடிதம் இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து சட்டத் துறை அலுவலகம் எந்தவித ஆவணத்தையும் சமர்ப்பிக்காதது குறித்து நீதிபதிகளில் ஒருவரான முகமட் பைருஸ் சுட்டிக் காட்டி, கண்டித்ததோடு, அத்தகைய நிலைமை தனக்கு நெருடலை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அசாஹாரி கமால் ரம்லி மற்றும் முகமட் பைருஸ் ஜாஃப்ரில் இருவரும் நஜிப்பின் எஞ்சிய தண்டனைக் காலத்தை அவர் முன்னாள் மாமன்னரின் உத்தரவுப்படி வீட்டுக் காவலில் கழிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கினர். மாமன்னரின் உத்தரவு இல்லை என சட்டத் துறை அலுவலகம் சத்தியபிரமாண ஆவணம் எதனையும் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
மற்றொரு நீதிபதியான அசிசா நவாவி நஜிப்பின் மேல்முறையீட்டை அனுமதிக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்கினார்.
நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க முடியுமா என்ற வழக்கு இன்று திங்கட்கிழமை (ஜனவரி 6) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்காடப்பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் அத்தகைய உத்தரவை வழங்கிய முன்னாள் மாமன்னர்- பகாங் ஆட்சியாளர் – சுல்தான் அப்துல்லாவின் அதிகாரபூர்வக் கடிதம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
நஜிப்பின் தண்டனை குறைக்கப்பட்ட நிலையில், எஞ்சிய சிறைவாசத்தை அவர் வீட்டுக் காவலில் கழிக்கலாம் என்ற முன்னாள் மாமன்னரின் உத்தரவு அந்தக் கடிதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்கு குறைக்கப்பட்ட சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் இருந்தபடியே அனுபவிப்பதா என்பது தொடர்பில் தான் சமர்ப்பித்த மேல்முறையீட்டு வழக்குக்காக இன்று திங்கட்கிழமை ஜனவரி 6-ஆம் தேதி டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ரா ஜெயாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தை காலை 8.30 மணியளவில் வந்தடைந்தார்.
எஞ்சிய சிறைத் தண்டனையை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வீட்டுக்காவலில் அனுபவிக்கும் வண்ணம் இனி அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ ரத்து செய்தாலும் நஜிப்புக்கு ஆதரவான பேரணியில் பல அம்னோ தலைவர்கள் புத்ரா ஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தின் முன்பாக இன்று காலை திரண்டனர்.
அவர்களில் துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியின் புதல்வி நூருல் ஹிடாயாவும் ஒருவர் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாஸ் கட்சியினரும் நீதிமன்ற வளாகத்தின் முன் திரண்டனர். அங்கு திரண்டிருக்கும் ஆதரவாளர்களுக்கு பெயர் தெரிவிக்க விரும்பாத நன்கொடையாளர்கள் ரொட்டியும் பானமும் இலவசமாக விநியோகித்தனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில் அம்னோ நஜிப்புக்கான ஆதரவு பேரணியை ரத்து செய்தாலும் பத்துமலை வளாகத்தில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றை இன்று காலை 11.00 மணிக்கு மஇகா நடத்தியது. அந்தக் கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டார்கள்.