குவாந்தான்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய கால சிறைத் தண்டனையை அவர் வீட்டில் கழிக்க, முன்னாள் மாமன்னரான பகாங் ஆட்சியாளர் அல்-சுல்தான் அப்துல்லா உத்தரவிட்டாரா என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சை நீதிமன்ற வழக்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து பகாங் சுல்தான் கருத்து எதனையும் தெரிவிக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பகாங் மாநில சட்ட ஆலோசகர் சைபுல் எட்ரிஸ் சைனுடின் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தன்னையும் பகாங் மந்திரி பெசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலையும் சந்தித்த பிறகு தனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு ஏற்ப எந்தக் கருத்தையும் வெளியிடப்போவதில்லை என பகாங் சுல்தான் கூறியதாக சட்ட ஆலோசகர் சைபுல் மேலும் தெரிவித்தார்.
நஜிப்பின் மகன் நிசார் ரசாக் சமர்ப்பித்த சத்தியப் பிரமாண வாக்குமூலத்தில் கண்டுள்ள தகவல்கள் குறித்தும் பகாங் சுல்தான் கருத்து எதனையும் வெளியிட மாட்டார். நிசார் ரசாக், பெராமு ஜெயா சட்டமன்ற உறுப்பினரும் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் ஆவார்.
நஜிப் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், இதுகுறித்து கருத்து சொல்வது முறையாக இருக்காது என்ற காரணத்தினாலேயே பகாங் சுல்தான் இந்த முடிவை எடுத்தார் என்றும் பகாங் சட்ட ஆலோசகரின் அறிக்கை குறிப்பிட்டது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தனது எஞ்சிய கால சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்கும்படி பகாங் சுல்தான் உத்தரவிட்டிருந்தார் என கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நஜிப் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
பகாங் ஆட்சியாளர் மாமன்னராக ஆட்சி புரிந்த காலகட்டம் ஜனவரி 30-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. அதற்கு ஒரு நாள் முன்னதாக கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்தின் கூட்டம் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது.
ஜூலை 3-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அமர்ஜிட் சிங் நஜிப்பின் மனுவை நிராகரித்தார். அதைத் தொடர்ந்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மேல்முறையீடு எதிர்வரும் ஜனவரி 6-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பில் புதிய ஆதாரங்களையும் நஜிப் தற்போது சமர்ப்பித்துள்ளார்.
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் நஜிப்புக்கு கடந்த ஜூலை 2020-இல் அதிகார விதிமீறல், நம்பிக்கை மோசடி, கள்ளப் பணப் பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 12 ஆண்டுகால சிறையும் 210 மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கான சிறைவாசத்தை நஜிப் தற்போது காஜாங் சிறைச்சாலையில் கழித்து வருகிறார்.
இந்த ஆண்டு (2024) பிப்ரவரி 2-ஆம் தேதி அரச மன்னிப்பு வாரியத்தின் முடிவின்படி நஜிப்பின் சிறைத்தண்டனை பாதியாக – ஆறு ஆண்டுகள் என – குறைக்கப்பட்டது. அவருக்கான அபராதமும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.