கோலாலம்பூர், மே 14 – ம.இ.கா.வின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் சுபாங் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்ட முருகேசன், நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தனது முயற்சியில் தோல்வி கண்டார்.
இதனைத் தொடர்ந்து தனது தோல்விக்குப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் தனது முடிவை அவர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுவுக்கு தெரிவித்து விட்டதாகவும், பழனிவேலுவும் அதனை ஏற்றுக் கொண்டதாகவும் வலைத்தள செய்திகள் தெரிவித்துள்ளன.
“நான் பதவியிலிருந்து விலகுவதற்கான தருணம் வந்துவிட்டது. மற்றவர்கள் எனக்குப் பதிலாகப் பொறுப்பேற்று கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, தேசியத் தலைவரோடு இணைந்து பணியாற்றி கட்சியை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும்” என்றும் முருகேசன் கூறியுள்ளார்.
ஒரு வழக்கறிஞரான முருகேசன், பழனிவேல் தேசியத் தலைவரான பின்னர் தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.