Home Featured நாடு “நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

“நாட்டின் குடிமகன் என்ற முறையில் எழுந்து நின்று குரல் கொடுக்கின்றேன்” விமர்சனங்களுக்கு முருகேசன் பதில்!

1049
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு முன்னாள் மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் (படம்) தனது தரப்பு பதிலை வழங்கியுள்ளார்.

dato-murugesan“மலேசியாவைக் காப்பாற்றுவோம் என்ற கருப்பொருளோடு நடத்தப்பட்ட கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றியதை மஇகாவின் இரண்டு தரப்புகளும் அரசியல் உள்நோக்கங்களை கற்பித்து பேசி வருகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் எனது சொந்த மனசாட்சிக்கு ஏற்பவே நடந்து கொண்டேன். நாட்டின் நலனை முன்னிறுத்திப் பார்க்கும் போது நான் செய்தது சரிதான் என நினைக்கின்றேன்” என முருகேசன் கூறியுள்ளார்.

தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டுள்ள விளக்கத்தில் “எனது செயலை டத்தோஸ்ரீ டாக்டர் பழனிவேல் தரப்பினரோடு தொடர்புபடுத்தி டாக்டர் சுப்ரமணியத்தின் அணியினர் இதனை அரசியலாக்கியுள்ளனர். அதே வேளையில் பழனிவேல் தரப்பினரில் கண்டனங்களுக்கும் நான் உள்ளாகியிருக்கின்றேன். இரண்டு தரப்புகளும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை விட்டு விட்டு, நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையையும், இந்திய சமுதாயத்தின் நலனைப் பற்றியும் கவனிக்கத் தொடங்க வேண்டும்” என முருகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“இது தொடர்பாக உடனடியாகக் கருத்துரைத்த டத்தோ எஸ்.கே.தேவமணி மஇகா அமைப்பு விதி 91-இன்படி நான் எனது மஇகா உறுப்பியத்தை இழந்துவிட்டேன் என அறிவித்துள்ளார். இதே அமைப்பு விதியின்படிதான் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் மஇகா உறுப்பினர் அல்ல என அறிவிக்கப்பட்டார். எனவே, நான் எப்படிப் பார்த்தாலும் மஇகா உறுப்பினர் அல்ல. டாக்டர் சுப்ரமணியம் தரப்பினர் நடத்திய தேர்தல்களிலும் நான் எனது மஇகா கிளை சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. பழனிவேல் தரப்பினர் நடத்திய தேர்தல்களை சங்கப் பதிவகமும் அங்கீகரிக்கவில்லை. எனவே இதுதான் இப்போதைக்கு மஇகாவில் எனது நிலை” என்றும் முருகேசன் தனது முகநூல் பதிவில் கருத்துரைத்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரையில் நான் நேசிக்கும் இந்த நாட்டிற்காக நானும் ஒரு குடிமகன் என்ற முறையில் என்னையும் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு, குரல் கொடுக்க எழுந்து நின்றிருக்கின்றேன்” என முருகேசன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.