புதுடெல்லி – வங்கிகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லைய்யா, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரிடம் கடன் பாக்கியை பெற்றுத்தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது, விஜய் மல்லைய்யா விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:-
கடன் பாக்கியை திரும்பச் செலுத்தாதவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், விஜய் மல்லைய்யாவை போன்ற பெரிய குழுமங்கள், வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த வேண்டியது, அவர்களது கடமை. அவரது நிறுவனங்கள், வங்கிகளுக்கு சில உத்தரவாதங்கள் அளித்திருக்கும் என்று கருதுகிறேன்.
எனவே, கடன் பாக்கியை திரும்ப வசூலிக்க வங்கிகள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும். விசாரணை அமைப்புகளுடன் இணைந்து, பலவந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கான வழிமுறைகளும் உள்ளன.
எனவே, கடன் பாக்கி வைத்துள்ளவர்கள், அதை நேர்மையாக செலுத்த வேண்டும் அல்லது பலவந்த நடவடிக்கையை சந்திக்க வேண்டி இருக்கும் என விஜய் மல்லைய்யாவிற்கு அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.