புது டில்லி: கர்நாடகாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில், அவரது மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் விரைவில் அவர் இந்தியா கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வங்கிகளில் கடனை பெற்றுவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கு, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட மீறல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அவர் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், அவர் இலண்டனுக்கு தப்பிச் சென்றார்.
கடந்த டிசம்பர் மாதத்தில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கை விசாரித்த இலண்டன் வெஸ்ட்மினீஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்தார். இம்முடிவினை எதிர்த்து பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.