Home இந்தியா இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (1) – “சிவகங்கையில் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா கார்த்தி?”

இந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (1) – “சிவகங்கையில் தந்தையின் பெயரைக் காப்பாற்றுவாரா கார்த்தி?”

1049
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எப்போதும் முன்னாள் நிதியமைச்சர் போட்டியிட்டு வந்திருக்கும் தொகுதியாகும். அவரது குடும்ப பாரம்பரியமும் இந்தத் தொகுதியில் பின்னிப் பிணைந்திருப்பதால், எப்போதுமே இந்தத் தொகுதியைத் தான் தனது நாடாளுமன்றத் தேர்தலுக்கான களமாக சிதம்பரம் பயன்படுத்தி வந்தார்.

அதற்கேற்ப 1984-ஆம் ஆண்டு தேர்தலிலும், பின்னர் 1989, 1991 தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளராக இங்கு போட்டியிட்டு வென்ற சிதம்பரம் பின்னர் 1996, 1998 தேர்தல்களில் மூப்பனாரின் தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

இப்போது அங்கே போட்டியில் குதித்திருப்பது அவரது மகன் கார்த்தி சிதம்பரம். தந்தை-மகன் இருவரை நோக்கியும் பாஜக அரசு பல்வேறு  வழக்குகளைப் புனைந்திருக்கும் நிலையில், நீதிமன்றக் கெடுபிடிகள், அமுலாக்க அதிகாரிகளின் நெருக்கடிகள்  இவற்றுக்கிடையில் இங்கே போட்டியிடுகிறார் கார்த்தி.

தந்தையைப் போலவே நெடிதுயர்ந்த உடல்வாகு, வெளிநாட்டுப் படிப்புகளால் சரளமாக வெளிவரும் ஆங்கிலப் புலமையோடு கூடிய உச்சரிப்பு, பரந்த உலக அரசியல் அறிவு, தமிழக டென்னிஸ் சங்கத்தில் முக்கியத் தலைமைப் பொறுப்புகள் வகித்ததால் கிடைத்த ஆளுமை, காங்கிரஸ் கட்சியில் பொறுப்புகள் வகிப்பது – வணிகத்தில் முத்திரை பதித்தது – இப்படியாக புதிய யுக இளம் வேட்பாளராக களமிறங்குகிறார் கார்த்தி!

ஆனால், வெற்றி வாய்ப்பு?

பாஜகவின் எச்.இராஜா கடும் போட்டியை வழங்குவாரா?

2014 பொதுத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதி இது என்பதால் அந்தக் கட்சியின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்களின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதால், கார்த்தி இங்கே கடும் போட்டியை எதிர் நோக்குகிறார்.

சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக அடிக்கடிக் கருத்துகளை உதிர்த்து சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் – அதே வேளையில் இந்துத்துவா கொடியைத் தூக்கிப் பிடிப்பவரான – எச்.இராஜா (படம்) பாஜக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சிறுபான்மை இனத்தவரின் வாக்கு இவருக்குக் கிடைக்காது என்பதால், கார்த்தி இங்கு வெல்வது சுலபமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கமல்ஹாசனின் மக்கள்  நீதி மய்யம் சார்பில் கவிஞர் சிநேகனும் இங்கு போட்டியிடுகிறார்.

சினிமாப் பாடலாசிரியராக ஏற்கனவே பிரபலம் அடைந்துள்ள  சிநேகன், கடந்த ஆண்டில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி கமல்ஹாசனை வைத்து நடத்திய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வழி பொதுமக்களிடையே வெகுவாகப் பிரபலமானவர். நன்கு உரையாற்றக் கூடிய ஆற்றலும் பெற்ற இவர் எத்தனை வாக்குகளைப் பெறுவார் என்பதை வைத்துத்தான் – இவரும் சிறுபான்மை இனத்தவரின் குறிப்பாக முஸ்லீம், கிறிஸ்துவ வாக்குகளைப் பிரிப்பாரா – என்பதை வைத்துத்தான் – வெற்றி பெறப் போவது யார் என்பது முடிவாகும்.

டிடிவி தினகரன் கட்சியின் சார்பில் தேர்போகி பாண்டி என்பவர் போட்டியில் குதிக்கிறார். அதிக பிரபலமில்லாதவர் என்றாலும் உள்ளூர்க்காரர் என்பதால் இவர் எத்தனை விழுக்காடு அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்பதை வைத்துத்தான் தொகுதியின் இறுதி வெற்றியாளர் யார் என்பது முடிவாகும்.

கார்த்தி வெற்றி பெற்றால், தந்தையின் அடிச்சுவட்டில் அரசியலில் – காங்கிரஸ் கட்சியில் – அடுத்த தலைமுறைத் தலைவராக உருவெடுப்பார்.

காங்கிரஸ்-மக்கள் நீதி மய்யம் – பாஜக – இவற்றுக்கிடையில் வாக்குகள் பிரித்துக் கொள்ளப்படும்போது டிடிவி தினகரன் அணியின் வேட்பாளர் வெற்றி பெறக் கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினராகிவிட்ட – 70 வயதைக் கடந்து விட்ட சிதம்பரம் இனி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி கார்த்தி சிவகங்கையில் வெல்வாரா?

அவரால் வெல்ல முடியவில்லை என்றால் சிவகங்கையைக் கைப்பற்றப் போவது யார்? என்ற கேள்விகளுடன் அரசியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.

-இரா.முத்தரசன்