புதுடில்லி – நீண்ட காலமாக இழுபறியாக இருந்து வரும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரம் தொடர்பில் இதுவரையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது ஏன் குற்றப் பத்திரிகை சார்வு செய்யப்படவில்லை என பல முறை ஊடக விவாதங்களில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
தற்போது சிதம்பரம் சிறையில் இருந்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் மீதும் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை இன்று வெள்ளிக்கிழமை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சார்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கான தடுப்புக் காவல் அக்டோபர் 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக திகார் சிறைச்சாலையில் இருந்து வரும் சிதம்பரம் பல முறை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தும் இதுவரையில் அவருக்குப் பிணையோ, விடுதலையோ வழங்கப்படவில்லை.
குற்றப் பத்திரிகையில் தற்போது சிறையில் இருந்து வரும் பீட்டர் முகர்ஜி உள்ளிட்ட சில தனிநபர்களோடு, சில நிறுவனங்களும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.