மதுரை – தமிழக சட்டசபை தேர்தலின்போது தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க வேண்டும் என்று மு.க.அழகிரி, ஒரு பட்டியலை, திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டியதையடுத்து திமுகவிற்குள் விரிசல் ஏற்பட்டது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அழகிரி திமுகவை விட்டு தற்காலிகமாகவும், பின்னர் நிரந்தரமாகவும் 2வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார்.
இந்த நீக்கத்திற்கு பிறகும் சமீபத்தில் அழகிரி திமுக மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை கூறி வந்தார். அப்போது அழகிரிக்கும், திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அவரை பொருட்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் விஜயகாந்த் இணைந்ததால் மக்கள் நல கூட்டணி வலிமை பெற்றுள்ளது.
இதையடுத்து அழகிரி தயவு திமுகவுக்கு தேவை என்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியோடு நீண்ட நேரம் தனிமையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருவரும், தேர்தல் வெற்றிக்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்துள்ளனர்.
பிரதி உபகாரமாக, தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட சீட் வழங்க அழகிரி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. அதேநேரம், இவ்விருவர் சந்திப்பு குறித்து கூறிய ஸ்டாலின்; “அழகிரி அவரது அம்மா-அப்பாவை சந்திக்க வந்ததாக கேள்விப்பட்டேன்.., அதில் அரசியல் இல்லை” என்று மட்டம் தட்டும் வகையில் பேட்டியளித்தார். ஆனால், அழகிரி ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தர கருணாநிதி சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக நேர்க்காணல் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையிலும், அழகிரிக்காக, கருணாநிதி இறங்கி வந்துள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். மேலும், தனக்கு வேண்டப்பட்டவர்கள் பட்டியலை கொடுத்து வேட்பாளர் பட்டியலில் இவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கருணாநிதிக்கு அழகிரி அன்பு கட்டளை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.