Home Featured நாடு “நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

“நஜிப்பை வீழ்த்த பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்துள்ளனர்” – தேவமணி குற்றச்சாட்டு

1104
0
SHARE
Ad

sk-devamany-jan17-300x202கோலாலம்பூர் – நேற்று நடந்த மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.முருகேசன் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தொடர்ந்து உடனடியாக வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றில், மஇகா தேசியத் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி “பழனிவேல் அணியினர் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சிகளுடன் இரகசியமாக இணைந்து பணியாற்றுகின்றனர் என்பது உறுதியாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

“மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளரும், டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் முக்கிய அரசியல் சகாவுமான டத்தோ முருகேசன் சின்னாண்டவர், எதிர்க்கட்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட ராயாட் காங்கிரஸ் என்ற நஜிப் எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருப்பது, பழனிவேல் அணியினர் எதிர்க்கட்சிகளோடு இணைந்துள்ளனர் என்பதை மறு உறுதிப்படுத்துகின்றது” என்றும் தேவமணி கூறியுள்ளார்.

Murugesan-speaking-Peoples Congress“அண்மையக் காலங்களில் மஇகாவின் நிலைத்தன்மையைக் குலைக்க சதியாலோசனை நடத்தி வரும் பழனிவேல் அணியினரின் முக்கிய புள்ளிகளில் முருகேசனும் ஒருவர். அண்மையக் காலமாக ஜசெகவின் உயர்மட்டத் தலைவர்களுடன் பழனிவேல் தொடர்பு கொண்டிருக்கின்றார் என்பதிலும் இரகசியம் ஏதுமில்லை. அவர்களுடன் அவர் கொண்டிருக்கும் அரசியல் தொடர்புகளும் அனைவருக்கும் தெரிந்ததே! இப்போது தேசிய முன்னணியில் இருக்கும் மைபிபிபி கட்சி, மற்றும் தேசிய முன்னணிக்கு ஆதரவான தோழமை இந்தியக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பழனிவேல் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதன் மூலம் தனது இரகசிய அரசியல் திட்டத்திற்கு அவர் ஆதரவு திரட்டி வருகின்றார். பழனிவேலுவுடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய முன்னணியின் இந்தியத் தோழமைக் கட்சிகள் பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்குக் காட்டிவரும் விசுவாசமும், ஆதரவும் உண்மையென்றால் அவர்கள் இப்போதே பழனிவேலுவிடம் இருந்து விலகி நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் தேவமணி அறைகூவல் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

நஜிப்புக்கு நிபந்தனையில்லாத முழு ஆதரவை வழங்கி வரும் மஇகா, இந்திய சமுதாயத்தில் அவருக்கான ஆதரவை ஒன்று திரட்டுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் தீவிரமாக இயங்கி வருகின்றது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேவமணி,

Palanivelஅடிமட்ட இந்திய சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலான மஇகாவின் புதிய தலைமைத்துவத்தின் திட்டங்கள் நல்ல பலனைத் தந்து வருகின்றன என்றும் இந்திய சமுதாயத்தில் இருந்தும் இத்தகைய முயற்சிகளுக்கு சாதகமான ஆதரவு கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

“மஇகாவின் புதிய தலைமைத்துவம் பிரதமரின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து இந்திய சமுதாயத்தினரிடையே வலியுறுத்தி வருகின்றது. இந்த கோரிக்கைக்கு இந்திய சமுதாயத்தினரிடையே கிடைத்து வரும் வரவேற்பும், ஆதரவும் பிரதமருக்கான ஆதரவை மறு உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றது” என்றும் தேவமணி தெரிவித்தார்.

“டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மேற்கொண்டு வரும் ஏமாற்று, சதியாலோசனை அரசியல் விளையாட்டுக்களால், இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட நஜிப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இந்திய சமுதாயத்திற்குத் தலைமையேற்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அவர்களை வழிநடத்தும் மஇகாவின் முயற்சிகள் தடம் புரண்டு விடாமல் இருப்பதை தேசிய முன்னணியின் முக்கிய கூட்டணிக் கட்சி என்ற முறையில் மஇகா உறுதி செய்யும்” என்றும் தேவமணி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.