Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய ஏபிஎன் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவுடன் போட்டியில் வெல்ல முடியுமா?

புதிய ஏபிஎன் தொலைக்காட்சி ஆஸ்ட்ரோவுடன் போட்டியில் வெல்ல முடியுமா?

502
0
SHARE
Ad

ABN-Featureஜூன் 9 – நேற்று சனிக்கிழமை கோலாகலமாக, பிரதமரால்தொடங்கி வைக்கப்பட்டன புதிய நிறுவனமான ஏபிஎன் நிறுவனத்தின் தொலைக்காட்சி அலைவரிசைகள்.

#TamilSchoolmychoice

இந்த புதிய தொலைக்காட்சி அலைவரிசைகள் எவ்வளவு தூரத்திற்கு மக்களின் மத்தியில் வரவேற்பைப் பெறும், ஏற்கனவே வர்த்தக உலகில் நன்கு வேரூன்றியுள்ள ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிலையத்துடன் போட்டியில் ஈடுபட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியுமா என்பது போன்ற கேள்விகளும் இயல்பாகவே எழுந்துள்ளன.

காரணம், ஆஸ்ட்ரோ பயனீட்டில் இருந்து கொண்டிருக்கும் காலத்திலேயே மெகா டிவி, எம்ஐடிவி என இரண்டு நிறுவனங்கள் கம்பி வழி தொலைக் காட்சி அலைவரிசைகளைத் தொடங்கி, அவை தோல்வியில் முடிந்திருக்கின்றன.

ஆனால், ஏபிஎன் மீடியா குழுமத்தின் நிர்வாகத் தலைவரான டான்ஸ்ரீ கே.கே.ஈஸ்வரன் தங்களின் புதிய அலைவரிசைகள் வெற்றி பெறும் என்று நம்புகின்றார். ஏனென்றால், தோல்வியடைந்த அந்த மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளின் தோல்விக்கு என்ன காரணம் என்பதைத் தாங்கள் ஆய்வு செய்து கண்டறிந்திருப்பதாகவும் அதே தவறைத் தாங்கள் செய்யப்போவதில்லை என்றும் அவர் ஸ்டார் பத்திரிக்கைக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

புதிய ஏபிஎன் தொலைக்காட்சி அலைவரிசைகளில் மற்றொரு வித்தியாசம் என்னவென்றால் அவர்களின் உள்ளடக்கம் டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் அடிப்படையிலும், அதிவேக இணையத் தொடர்புகளின் மூலமாகவும் வழங்கப்படுவதாகும். அதோடு இந்த சேவைக்கான கட்டணம் குறைந்த விலையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

அதிவேக இணையத் தொடர்பு சேவைகளை வழங்கப்போவதால் ஏபிஎன் நிறுவனம் டெலிகோம் மலேசியா, டைம் பெர்ஹாட், மெக்சிஸ் போன்ற நிறுவனங்களோடு நேரடி வர்த்தகப் போட்டியிலும் இறங்கியுள்ளது.

இந்த நிறுவனங்களும் அதிவேக இணையத் தொடர்புகளின் மூலம் தொலைக்காட்சி சேவைகளை வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, காற்பந்து போன்ற எல்லா விளையாட்டு அலைவரிசைகளும் ஆஸ்ட்ரோவின் கைவசம் இருப்பதால், அதிகமான ரசிகர்கள் விளையாட்டு அலைவரிசைகளின் மீது மோகம் கொண்டிருப்பதாலும், பெரும் எண்ணிக்கையிலான அந்த ரக ரசிகர்களை ஈர்ப்பதில் ஏபிஎன் நிச்சயம் சவால்களைச் சந்திக்கும்.

தற்போது 6.7 மில்லியன் இல்லங்கள் தொலைக்காட்சிகளைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் 3.5 மில்லியன் இல்லங்கள் ஆஸ்ட்ரோ சேவையைப் பெற்றிருக்கின்றன.

இதனால் ஆஸ்ட்ரோவின் இத்தகைய ஆக்கிரமிப்பை மீறி ஏபிஎன் நிறுவனம் இந்த தொலைக்காட்சி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டியிருக்கும்.

மிகக் குறைவான சலுகை விலைகள், அதிகமான அலைவரிசைகள் என பல கோணங்களில் வித்தியாசமான அதே நேரத்தில் விலை குறைவான சேவைகளை வழங்கினால் மட்டுமே ஏபிஎன் தொலைக்காட்சி வர்த்தகப் போட்டியில் ஆஸ்ட்ரோவை முந்திச் செல்ல முடியும்.