Home 13வது பொதுத் தேர்தல் ஜூன் 15ஆம் தேதி கறுப்பு பேரணியில் பாஸ் பங்கேற்கும் – முகமட் சாபு அறிவிப்பு

ஜூன் 15ஆம் தேதி கறுப்பு பேரணியில் பாஸ் பங்கேற்கும் – முகமட் சாபு அறிவிப்பு

456
0
SHARE
Ad

PAS-Logo-Sliderஜூன் 10 – எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் கறுப்பு பேரணி 505 கூட்டத்தில் பங்கேற்க பாஸ் கட்சி அதிகாரபூர்வமாக முடிவெடுத்துள்ளது என அந்த கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற பாஸ் கட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் இந்த முடிவு எடுத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாடு முழுமையிலும் பல இடங்களில் நடைபெற்ற கறுப்புப் பேரணிகளின் உச்ச கட்ட பேரணியாக கோலாலம்பூர் பேரணி திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாஸ் கட்சி இது போன்ற பேரணியில் பங்கேற்காது என்றும் மாறாக அடுத்த பொதுத் தேர்தலை நோக்கி தனது கவனத்தை செலுத்தும் என்றும் பாஸ் ஆன்மீகத் தலைவர்களின் குழுவின் தலைவர் ஹாருண் தாயிப் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூன் 15 பேரணியில் பாஸ் பங்கேற்குமா என நிலவி வந்த ஊகங்களுக்கு முகமட் சாபுவின் அறிவிப்பு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

இதற்கிடையில் 13வது பொதுத் தேர்தலில் ஏற்பட்ட சரிவுகள் குறித்து ஆய்வொன்றை மேற்கொள்ள சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

சில தொகுதிகளில் பிகேஆர் கட்சியுடன் வேட்பாளர் நியமனங்களில் ஏன் மோதல்கள் ஏற்பட்டன என்பது குறித்தும் இந்த சிறப்புக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.

2008 பொதுத் தேர்தலில் 25 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றிய பாஸ் கட்சி  13வது பொதுத் தேர்தலில் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றியதோடு, கெடா மாநிலத்திலும் தேசிய முன்னணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.