ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞனை காலம் மிக விரைவில் தன்னிடத்தில் எடுத்துக்கொண்டு விட்டது தான் விதியின் விந்தையான விளையாட்டு. கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்து விட்டது. முதல் நாள் இரவு படுக்கச் சென்றவர் காலையில் எழவேயில்லை.
இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால்பதித்த மணிவண்ணன், பின்னர் அவரது வெற்றி படங்களான அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற படங்களுக்கு வசனங்களையும் எழுதினார். கோபுரங்கள் சாய்வதில்லை மணிவண்ணனின் முதல் படம். அதன் பின் நூறாவது நாள் என்ற படம் மணிவண்ணனை திகில் பட இயக்குனராக அடையாளம் காட்டியது.
தனது குரு பாரதிராஜாவைப் பிரிந்து தனியாகப் படம் இயக்கி வந்தாலும் கூட, அவர் மீது தான் வைத்திருந்த குருபக்தியை சாகும் வரை மணிவண்ணன் மறக்கவில்லை. மணிவண்ணன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழ் பத்திரிக்கை ஒன்றில் வாசகர் கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா, மணிவண்ணனைப் பற்றி மிக மோசமாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இயக்குனர் மணிவண்ணன், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தான் இந்த அளவிற்கு சிறந்த இயக்குனராக உருவானதற்குக் காரணம் தனது குரு பாரதிராஜா தான் என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார். மணிவண்ணனின் இந்த கண்ணீர் பேட்டி கேட்பவர் அனைவரின் மனதையும் கனக்கச் செய்கிறது.
மணிவண்ணன் தனது குரு பாரதிராஜா மீது எந்த அளவிற்குப் பற்று வைத்திருந்தார் என்பதற்கு அவர் அளித்த இந்த வானொலிப் பேட்டியே சான்றாக உள்ளது.
மணிவண்ணன் அளித்த அந்த வானொலிப் பேட்டியை கீழ்காணும் இணைப்பின் வழிக் கேட்கலாம்.
https://www.facebook.com/