கோலாலம்பூர், ஜூன் 24 – தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்று கூறி கடந்த சனிக்கிழமை மாலை தொடங்கி பாடாங் மெர்போக் திடலில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த எதிர்கட்சியினரை, இன்று காலை காவல்துறையினர் உதைத்ததோடு, அவர்களது கூடாரங்களையும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து Solidariti Anak Muda Malaysia (Samm) அமைப்பின் தலைவரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் (படம் வலது) தனது டிவிட்டர் வலைத் தளத்தில் கூறியிருப்பதாவது, “ இன்று காலை 8 மணிக்குள் கூடாரங்களை அகற்றி விடுவோம் என்று கோலாலம்பூர் மாநகராட்சிக்கு நேற்று இரவே வாக்குறுதி அளித்திருந்தோம்.
ஆனால் காலை 4.30 மணிக்கே, ஆயுதமேந்திய காவல்துறையினருடன் பாடாங் மெர்போக் திடலுக்கு வந்த கோலாலம்பூர் மாநகராட்சியைச் சேர்ந்த அதிகாரிகள், உறங்கிக் கொண்டிருந்தவர்களை உதைத்ததோடு, அங்கிருந்த கூடாரங்களையும் வலுக்கட்டாயமாக அகற்றினர்” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக, பக்காத்தானின் 15 ஆவது ‘கறுப்பு 505’ பேரணி கடந்த சனிக்கிழமை, தலைநகர் பாடாங் மெர்போக்கில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் தலைமையிலான 100 பேர் அடங்கிய பக்காத்தான் ஆதரவாளர்கள், தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலகும் வரை இங்கிருந்து போக மாட்டோம் என்று கூறி திடலிலேயே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.