ஜூன் 24 – மலேசிய நாட்டில் இதுவரை கண்டிராத போராட்டமாக, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 505 கறுப்புப் பேரணியைத் தொடர்ந்து சுமார் 100 பேர் இன்னும் மெர்போக் திடலில், தாங்கள் நிர்மாணித்திருக்கும் தற்காலிகக் கூடாரங்களை அகற்றாமல் போராடி வருகின்றனர்.
அவர்கள் இரண்டாவது நாளாக தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
சொலிடாரிடி அனாக் மூடா மலேசியா என்ற அரசு சார்பற்ற இயக்கம் போராட்டவாதிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. அந்த இடத்தில் வெளிச்சம் ஏற்படுத்த டீசல் இயந்திரங்கள் மூலமாக (ஜெனரேட்டர்) வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக மாநகர சபையினரும் காவல் துறையினரும் அவர்களை அகற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே, மாநகரசபையினர் அந்த தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட வேண்டுமென எச்சரிக்கை அறிவிப்புக்களை அந்த கூடாரங்களின் மீது ஒட்டியிருக்கின்றனர்.
இருப்பினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து அந்த தற்காலிகக் கூடாரங்களை அகற்றாமல் இருந்து வருகின்றார்கள்.
மெர்போக் திடலை சுற்றி மாநகரசபை அதிகாரிகள் பலர் தென்பட்டாலும் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் பதவி விலக வேண்டும் என்பதுதான் ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோளாகும். இருப்பினும் மெர்போக் திடலில் கழிவறை வசதிகள் பூட்டப்பட்டிருப்பதால், அந்த வசதிக்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் கொஞ்ச தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இதனால், இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களால் விடாப்பிடியாக இங்கேயே தங்கியிருக்க முடியும் என்பது தெரியவில்லை. அதிலும் மோசமாகி வரும் புகைமூட்ட வானிலையால் இவர்கள் சுகாதாரக் கேடுகளை எதிர்நோக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மருத்துவ வசதிகள் தேவைப்பட்டால் வழங்கவும் ஒரு குழு தயார் நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதோடு, முதலுதவி வாகனம் ( ஆம்புலன்ஸ்) ஒன்றும் தயார் நிலையில் மெர்போக் திடலின் அருகில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.