சென்னை, ஜூன் 24- கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு நிவாரண உதவியாக தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தரகண்ட் மாநிலத்தில் கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சில மாவட்டங்களில் ஏராளமான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மக்களும், கேதாரநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, ஹேம்குந்த் சாஹிப் பகுதிகளுக்குச் சுற்றுலா மற்றும் யாத்திரை சென்றவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து அங்கு சென்ற யாத்ரிகர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கெனவே நான் அறிவித்துள்ளேன். கடந்த 19-ஆம் தேதி தொலைபேசியுடன்கூடிய கட்டுப்பாட்டு அறை எனது உத்தரவின்பேரில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திறக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து சென்ற யாத்ரிகர்கள் பாதுகாப்பாக திரும்ப அழைத்து வரப்படுவது குறித்து கடந்த 20-ஆம் தேதி உயர்நிலை அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். எனது வழிகாட்டுதலின்படி, தில்லியில் உள்ள தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி தலைமையிலான குழு டேராடூன் சென்று தமிழக பயணிகளை அங்கிருந்து அழைத்து வரும் செயலில் ஈடுபட்டனர்.
தமிழக யாத்ரிகர்கள் உத்தரகண்டில் இருந்து தில்லி அழைத்துச் செல்லப்பட்டு, தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர், தமிழக அரசின் செலவில் அவர்கள் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 21-ஆம் தேதி முதல்கட்டமாக 83 பேரும், 22-ஆம் தேதி 275 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டன. உத்தரகண்ட் மாநிலத்தில் பேரிடர் ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து அழைத்து வரப்படும் அனைத்து தமிழக யாத்ரிகர்களுக்கும் இதேபோன்ற வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கிறேன்.
இந்தப் பேரிடரில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உடனடியாக மீட்புப் பணி, நிவாரண உதவி, மறு குடியமர்வு, மறுகட்டமைப்பு ஆகிய பணிகளை வரும் நாள்களில் மேற்கொள்வது உத்தரகண்ட் அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தமிழக அரசு மற்றும் மக்களின் சார்பில் முதல்கட்ட உதவியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து உத்தரகண்ட் அரசுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளிக்கப்படும். தொடர்ந்து உத்தரகண்ட் அரசுக்குத் தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது.