கோலாலம்பூர், ஜூன் 25 – இன்று 13 வது நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங்கின் உரை, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் ஆணை போல் இல்லை. மாறாக அவரது உரை விவாதத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
“பேரரசரின் உரை, எப்போதும் பிரதமரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட பிறகே பேசப்படுகிறது” என்று இன்று நாடாளுமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை உருவாக்கவே பிரதமர் இப்படி ஒரு உரையை பேரரசருக்கு பரிந்துரைத்துள்ளார் என்றும், இது எல்லா நாடாளுமன்றத்திலும் நடக்கக்கூடியது தான் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
அதோடு பேரரசரின் உரை தேசிய முன்னணி சார்பாக இருப்பதாகவும் அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.
நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தல், ஜனநாயக முறைப்படி தான் நடைபெற்றுள்ளது. ஆகவே தேர்தல் முடிவுகளுக்கு மலேசிய மக்கள் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று பேரரசர் இன்று தனது உரையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.