Home நாடு சர்ச்சையைக் கிளப்பிய நூல் அறிமுக விழா! மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கொதிப்பு!

சர்ச்சையைக் கிளப்பிய நூல் அறிமுக விழா! மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் கொதிப்பு!

926
0
SHARE
Ad

Untitled-1கோலாலம்பூர், ஜூலை 20 – தமிழ் எழுத்துலகில் சர்ச்சைகள் என்பது காலங்காலமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் குறிப்பாக முகநூல் என்ற ஒன்று அறிமுகமான பிறகு, நாலு சுவர்களுக்குள் நடக்கும் சர்ச்சைகள் அடுத்த சில மணி நேரங்களில் உலகமே அறியும் அளவிற்கு சமூக வலைத்தளங்களில் காரசார விவாதங்களாக உருவெடுக்கின்றன.

அதனால் தானோ என்னவோ மேடைப் பேச்சு என்றாலே பிரபலங்கள் பலர் பேயைக் கண்டது போல் அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். அதிலும் சிலர் சர்ச்சையை கிளப்புவதற்காகவே ஏதாவது ஒன்றைக் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

இப்படியாக இருக்க, மலேசிய எழுத்துலகில் புதிய சர்ச்சை ஒன்று தற்போது வலைத்தளங்களில் உலாவி வருகிறது. கடந்த வாரம் ‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ என்ற நூல் அறிமுகவிழா ஒன்று நடைபெற்றது. அவ்விழாவில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராஜேந்திரனும், முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்களும் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

ராஜேந்திரன் அவர்கள் “எழுத்தாளர் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விருது பட்டியலில் பெண்களை இணைத்துக்கொள்கிறோம். நான் தலைவர் ஆன பின்பு விருதளிப்பில் பெண்களின் பெயரைக் அதிகம்  கூட்டியுள்ளேன். அது எழுதப்படாத சட்டமாகிவிட்டது” என்றும், “மாமியார் மருமகள் சண்டைய பாத்திருப்போம்; ஆனா ஒருமகன மாமியார் குறை சொல்லியிருக்கிறார்களா?, தமிழ் சார்ந்த கருத்தரங்குகளில் எங்காவது ஆண்களுக்கான கருத்தரங்கு என மட்டும் உண்டா?, எங்காவது ஆண்களின் சிறுகதை/ கவிதைகள்/ கட்டுரைகள் மட்டுமே என வெளியீடுகள் கண்டுள்ளதா?”

– போன்ற கேள்விகளைக் கேட்டு, இதெல்லாம் ஆண்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பொருள் படக் கூறியுள்ளார்.

அப்படியானால், ஆண்களின் பெருந்தன்மையால் தான் மலேசியாவில் பெண் இயக்கியவாதிகள் இயங்குகிறார்களா? என்று கூறி மலேசிய இளம் தலைமுறை எழுத்தாளர்களான ம.நவீன், கே.பாலமுருகன், தயாஜி, அ.பாண்டியன், சுதந்திரன் போன்றோர் ராஜேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக நாளை நடக்கவுள்ள இவ்வருடத்திற்கான சிறந்த சிறுகதைகளுக்கான பரிசளிப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

அதே போல்,முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் பெண் எழுத்தாளர்களான மலாதி மைத்ரி, குட்டி ரேவதி  தங்கள் அவையங்களை மையப்படுத்தி படைப்பிலக்கியங்களை எழுதுவது வரம்பு மீறிச் செல்கிறது. நாம் இன்னும் அந்த நிலைக்குப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து ‘வல்லினம்’ இலக்கியச் சிற்றிதழிலும், அதன் ஆசிரியர் ம.நவீன், ‘ஆண்களின் பெருந்தன்மையினால் மலேசிய பெண்கள் இலக்கியத்தில் இயங்குகிறார்கள்!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

பெண்கள் தங்கள் அவையங்களை படைப்பிலக்கியங்களில் கொண்டு வருவது ஔவை காலந்தொட்டு இருந்து வருகிறது. அதே தமிழகத்தில் வைரமுத்து, வாலி போன்ற பாடலாசிரியர்கள் தங்கள் பாடல்களில் ‘முலை’ என்ற சொல்லை அடிக்கடி வணிக ரீதியில் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களை இலக்கியப் படைப்பாளிகளாக ஏற்றுக் கொள்ளும் நீங்கள், குட்டி ரேவதி போன்றோர் அவையங்களை முன்வைத்து படைப்பிலக்கியங்களை கொண்டு வருவதை வரம்பு மீறல் என்று ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என்றும் வல்லினம் ஆசிரியர் நவீன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தற்போது முகநூலில் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.