Home வணிகம்/தொழில் நுட்பம் ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றிய திரைப்படத்திற்கு போதிய வரவேற்பில்லை!

ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றிய திரைப்படத்திற்கு போதிய வரவேற்பில்லை!

497
0
SHARE
Ad

Jobs-movie-posterஆகஸ்ட் 20 – தகவல் தொழில் நுட்பத் துறையில் உலகையே ஒரு கலக்கு கலக்கிய ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றிய ஜோப்ஸ் (“Jobs”) என்ற திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. அமெரிக்கா, கனடாவில் திரையிடப்பட்டுள்ள இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை என்பதோடு வார இறுதி வசூலாக 6.7 மில்லியன் அமெரிக்க டாலரையே பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக இருந்து தொழில் நுட்ப உலகில் அதநவீன மாற்றங்களுக்கும், புரட்சிகளுக்கும் வித்திட்ட ஸ்டீவ் ஜோப்சின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இந்த திரைப்படத்தில் பிரபல பாடகர்-நடிகர் ஆஷ்டன் குட்ச்சர், ஸ்டீவ் ஜோப்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஸ்டீவ் ஜோப்சின் ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறும் இந்தப் படம், ஆப்பிள் நிறுவன இயக்குநர் வாரியத்தால் அவர் வெளியேற்றப்பட்டு, பின்னர் 2001ஆம் ஆண்டு ஒரு நட்சத்திரத்திற்கு உள்ள வரவேற்புடன் மீண்டும் அதே நிறுவனத்தின் தலைமைப் பதவியில் அமர்த்தப்பட்டதையும், ஐபோட், ஐபோன், ஐபேட் போன்ற தொழில் நுட்பக் கருவிகளை அவர் கண்டுபிடித்த வரலாற்றையும் விரிவாக எடுத்துக் கூறுகின்றது.

12 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றிய மற்றொரு திரைப்படம்

இதற்கிடையில் ஜோப்ஸ் பற்றிய மற்றொரு திரைப்படமும் தற்போது தயாரிப்பில் இருந்து வருகின்றது. திரைப்பட ரசிகர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ள இந்த திரைப்படம் எப்போது வெளிவரும் என்ற தகவல்கள் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

இந்த இரண்டாவது திரைப்படத்தில் சிறந்த இயக்குநரும், சிறந்த கதை வசனகர்த்தாவும் கைகோர்த்துள்ள காரணத்தால், இதற்கான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. வால்டர் ஐசாக்சன் என்பவர் ஜோப்சின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி எழுதிய, அமோகமான விற்பனையைக் கண்ட புத்தகத்தின் திரைப்பட வடிவமாக இந்த இரண்டாவது படம் உருவாகி வருகின்றது.