ஜோர்ஜ் டவுன், ஆகஸ்ட் 20 – நாட்டில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்குக் காரணமான 5 இந்தியர்களை காவல்துறையினர் நேற்று சுங்கை நிபோங்கிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ஒன்றில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், காவல்துறையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே இந்த 5 பேரும் உயிரிழந்தனர்.
ஜே.கோபிநாத் (வயது 31), ஆர்.ரமேஷ் (வயது 27), ஏ.வினுட் (வயது 23), எம்.சுரேஷ் (வயது 25), எம்.கோபிநாத் (வயது 21) ஆகிய இந்த ஐந்து பேரும் மூன்று மாநிலங்களில் நடந்த 12 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு காரணமானவர்கள் என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் கூறினார்.
சம்பவத்தின் போது வெள்ளி நிறத்திலான நோரின் கோ, 38 சுழல் துப்பாக்கி, கறுப்பு வால்தர் பிபிகே என மூன்று துப்பாக்கிகளை அவர்களிடமிருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது பினாங்கு காவல்துறை, கெடா, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை அடங்கிய குழு, சுங்கை நிபோங் செஞ்சுரிபேயிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வாடகை வீட்டிற்குச் சென்றனர்.
காவல்துறை கதவைத் தட்டி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். எனினும் உள்ளிருந்து பதில் ஏதும் வராததால் காவல்துறை கதவை உடைத்து அவ்வீட்டில் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பலர் காவல்துறையினரை நோக்கிச் சுடத் தொடங்கினர். இதனால் காவல்துறையினரும் திருப்பி சுட்டுக் கொன்றனர்.
அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல்துறை இன்னும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்று பினாங்கு மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹிம் ஹனாபி தெரிவித்தார்.