ஆகஸ்ட் 21 – (கூடுதல் தகவல்களுடன்) இன்று மத்தியானம் ஏறத்தாழ 3 மணியளவில் கெந்திங் மலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. அந்த பேருந்தில் 53 பேர் பயணம் செய்தார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில், கெந்திங் மலையிலிருந்து கீழே வந்து கொண்டிருந்த பேருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால் 24 ஆண்களும் 13 பெண்களும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநரும் இந்த விபத்தில் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டினராவர்.
44 பேர்களை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகள் – அதாவது 53 பேர் – இருந்த காரணத்தால் அந்த பேருந்து விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என விபத்தை விசாரித்து வரும் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேருந்தை ஓட்டிய ஓட்டுநர், நிலை தடுமாறி சாலையில் நடுவிலிருந்த தடுப்பில் மோதியதால், பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. பள்ளத்தாக்கில் விழுந்தபோது, சில பயணிகள் பேருந்திலிருந்து தூக்கியெறியப்பட்டனர்.
கெந்திங்-கோலாலம்பூர் சாலையில் 36வது மைலில், சின் ஸ்வீ குகைக் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அகமட் ஷா, பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் ஆகியோர் சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக அங்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கமளித்தனர்.