புதுடெல்லி, ஆகஸ்ட் 29 – இந்திய எல்லைக்குள் மியான்மர் ராணுவம் ஊடுருவியதாக வெளியான தகவல்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன்,எல்லையில் மியான்மர் ராணுவம் ஊடுருவவில்லை என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அசாம் துப்பாக்கி படை பிரிவினர் மியான்மர் ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிரச்சனைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து விரைவில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் சந்தல் மாவட்ட எல்லையில் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மியான்மர் ராணுவத்தினர் ஊடுருவி முகாம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
மணிப்பூர் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி மியான்மர் ராணுவத்தினர் முகாம் அமைக்கும் பணியை கைவிட மறுத்துவிட்டனர். முகாம் அமைக்கப்படும் இடமான ஹோலேன்பாய் கிராமே மியான்மருக்கு சொந்தமானது என்று அந்த நாட்டு ராணுவம் கூறி வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை ஊடுருவலாக கருத முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.