Home இந்தியா பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு

461
0
SHARE
Ad

புதுடெல்லி, செப். 10- ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.

அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா தயாராகி வருகிறது.

#TamilSchoolmychoice

Modi1இந்த தேர்தலில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் பட்டியல் வரிசையில், குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி முதல் இடத்தில் இருந்து வந்தார்.

அதற்கு முன்னோடியாக, கட்சியின் பிரசார குழு தலைவராக சமீபத்தில் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டு, நாடு தழுவிய பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.

ஆனால், கட்சியின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் போன்றவர்கள் இந்த நியமனத்தை விரும்ப வில்லை.

அவர்களுடைய எதிர்ப்பை மீறி, பா.ஜனதா கட்சியின் கொள்கை வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர்கள் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் உறுதியாக இருந்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த மூத்த தலைவர்களை சந்தித்து அவர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். அதன்பின் நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட மூத்த தலைவர்கள், 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்தபின்னர் அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று, அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

ஆனால், நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக நியமிப்பதை தள்ளிப்போட விரும்பாத ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தவிர, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட 13 இந்து மத அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர் மோகன் பகவத், விசுவ இந்து பரிஷத் இயக்க தலைவர் பிரவீன் தொகாடியா உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் எல்.கே.அத்வானி, நரேந்திரமோடி போன்ற தலைவர்கள் பங்கேற்றனர்.

நேற்றுடன் முடிவடைந்த இந்த பேச்சுவார்த்தையில், நரேந்திரமோடியை பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் ஒருமித்த முடிவு ஏற்பட்டது.

அதன்படி, இன்னும் ஒரு வாரத்தில் பா.ஜனதா ஆட்சி மன்ற குழு கூடி, இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.13-ல் இருந்து 19-ந்தேதிக்குள் இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.