ஜெனீவா, செப். 10- இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களுக்கு, தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் நவநீதம் பிள்ளை பேசினார்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை சமீபத்தில் இலங்கைக்கு சென்றார்.
தமிழர் பகுதிகளுக்கும் சென்று உரையாடினார்.இந்நிலையில், ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 24-வது கூட்டம நடைபெற்றது. அதில், நவநீதம் பிள்ளை தொடக்க உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது சமீபத்திய இலங்கை பயணத்துக்கு ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அங்கு மறுகட்டுமானம், நல்லிணக்கம் ஆகியவற்றில் நிலவும் முன்னேற்றங்களை ஆய்வு செய்ய என்னை இலங்கை அரசு அனுமதித்தது.
அதுபற்றி இந்த கூட்டத்தின் பின்பகுதியில் நான் அறிக்கை தாக்கல் செய்வேன். அதே சமயத்தில், இலங்கையில் நான் சந்தித்த மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தாக்குதல்கள், பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதுதான் எனது உடனடி கவலை ஆகும்.
சிரியா பிரச்சினை பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஆணைய கூட்டத்தில் நான் பேசும்போது, ஏற்கனவே 2,600 பேர் இறந்து இருப்பதாக தெரிவித்தேன். தற்போது, சாவு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. அகதிகள் எண்ணிக்கை 20 லட்சம் ஆகிவிட்டது.
மேலும் 40 லட்சம் பேர் சிரியாவுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர். அண்டை நாடுகள் அகதிகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. குளிர்காலம் நெருங்கும் நிலையில், சிரியா மக்களின் நிலைமை கற்பனைக்கு எட்டாத நிலையை அடைந்துள்ளது.
ரசாயன குண்டு பயன்படுத்துவது, கொடூர குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இருப்பினும், சிரியாவில் அது பயன்படுத்தப்பட்டு உள்ளது.அப்பாவி மக்களை கொல்லும் போக்கை தடுத்து நிறுத்த கூட்டு நடவடிக்கை எடுக்க சர்வதேச நாடுகள் தாமதம் செய்து வருகின்றன.
வல்லரசு நாடுகள் தொடர்ந்து முரண்படுவதற்கு இது நேரம் அல்ல. இருப்பினும், ராணுவரீதியாக பதிலடி கொடுப்பதோ, ஆயுத சப்ளை செய்வதோ, பிராந்திய மோதலை அதிகரிப்பதுடன், மேலும் பலர் உயிரிழக்க காரணமாகி விடும்.
உடனடி பேச்சுவார்த்தைதான் ஒரே வழி.எனவே, சிரியாவில் சண்டையிடும் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு வரவழைத்து ரத்தஆறு ஓடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஐ.நா.வுடன் உலக நாடுகள் இணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு நவநீதம் பிள்ளை கூறினார்.